Tuesday, February 8, 2011

தேர்தலில் கிரிமினல்கள் போட்டி: நவீன் சாவ்லா வேதனை

புதுச்சேரி : "தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவது, பணப்புழக்கம் ஆகியவை பெரும் சவாலாக உள்ளன. தேர்தலில் பங்கேற்க இளைஞர்கள் முன்வர வேண்டும்' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா கூறினார்.



புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மேலாண்மை துறை சார்பில், "இந்தியாவில் தேர்தல் முறை நிர்வாகம்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. பேராசிரியர் ராமதாஸ் வரவேற்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் தரீன் தலைமை தாங்கினார்

.இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: பொதுவாக ஒரு மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் போது, அம்மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் தேர்வுகள், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட முக்கிய காரணிகள் கருத்தில் கொள்ளப்படும். தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவது, பணப்புழக்கம் ஆகியவை தேர்தலில் பெரும் சவாலாக உள்ளன. தேர்தலில் பங்கேற்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.தேர்தலில் வேட்பாளர்கள் வரம்பு மீறி நடக்கும் போது, நோட்டீஸ் அனுப்பி, வழக்கு போடுகிறோம். இவ்விஷயத்தில் தேர்தல் கமிஷன் அதன் அதிகார எல்லைக்குட்பட்டு தான் நடவடிக்கை எடுக்க முடிகிறது.தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன், எந்த ஒரு அதிகார அமைப்புகளிடமும் கருத்து கேட்பதில்லை. தேர்தல் கமிஷன் முழு திருப்தி அடையும் போதும், எதிர்க்கட்சிகள் வசதியான சூழ்நிலையை உணரும் போதும் தான், தேர்தல் நடத்தப்படுகிறது.

நமது நாட்டில் தேர்தல் நடைமுறை முன்னேற்றம் பெற்றுள்ளது. வரும் தேர்தலில் இன்னும் முன்னேற்றம் பெறும். ஜனநாயகத்தில் ஒரு ஓட்டு கூட முக்கியமானது தான். கடந்த 2009 தேர்தலில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே ஒரு பூசாரிக்காக, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து சில குற்றச்சாட்டு உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் தான் தயாரிக்கப்படுகின்றன. அதில் பதிவு செய்யப்படும் தரவுகளில் தவறு நடக்க வாய்ப்பில்லை.இவ்வாறு நவீன் சாவ்லா பேசினார்.பின், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலாண்மை துறைத் தலைவர் பேராசிரியர் ராயா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

print