Tuesday, February 8, 2011

ஜெ.,க்கு பூரண ஓய்வு: டாக்டர்கள் அறிவுறுத்தல் : சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விலக்கு

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக, சட்டசபை கூட்டத்தொடரில் ஜெயலலிதா பங்கேற்க விலக்களிக்கும் தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சென்னை கோட்டையில், தமிழக சட்டசபை இயங்கியபோது, அ.தி.மு.க., பொதுச் செயலரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, ஓரிரு முறை மட்டுமே பங்கேற்றார். மற்ற நாட்களில் சபை நடக்கும்போது, சட்டசபைக்கு வந்து, கையெழுத்திட்டு திரும்பியுள்ளார்.



அண்ணா சாலையில் புதிய சட்டசபை வளாகம் அமைக்கப்பட்ட பின், அங்கு கூடிய கூட்டத்தொடர், கவர்னர் உரை, இடைக்கால பட்ஜெட் கூட்டங்களில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டுப் போராட்டங்களை நடத்தியபோதும், ஜெ., சட்டசபைக்கு வரவில்லை. முந்தைய நடைமுறையைப் போல், சபைப் பதிவேடுகளில் கையெழுத்திடக்கூட அவர் புதிய சட்டசபைக்கு வரவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 190(4)ன் படி, ஒரு எம்.எல்.ஏ., தொடர்ந்து, 60 நாட்களுக்கு சட்டசபை கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால், அவரை சட்டசபை தகுதியிழக்கச் செய்து, அந்த இடத்தை காலியிடம் என அறிவிக்க முடியும்.

இதன்படி, ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ., பதவியை பறிக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும், ஆளுங்கட்சியினர் அதற்கான முயற்சி ஏதும் எடுக்கவில்லை. இந்நிலையில், இந்த கூட்டத் தொடரில், ஜெ., பங்கேற்க விலக்களிக்கும் தீர்மானத்தை, அ.தி.மு.க., திடீரென நேற்று சட்டசபையில் கொண்டு வந்தது. சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், எதிர்க்கட்சித் தலைவர் இக்கூட்டத் தொடரில் பங்கு பெறுவதில் இருந்து விலக்களிக்க அனுமதிக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை அ.தி.மு.க., கொறடா செங்கோட்டையன் வழிமொழிந்தார். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற சபாநாயகர் ஆவுடையப்பன் குரல் ஓட்டெடுப்பு நடத்தினார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் காத்த நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குரல் எழுப்பி, தீர்மானத்தை நிறைவேற்றினர்.

No comments:

print