Saturday, February 5, 2011

மீனவர்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்போம்: சுஷ்மா சுவராஜ்ஆவேசம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவர் ஜெயகுமார், ஜன., 22ம் தேதி இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். இவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்க லோக்சபா எதிர்கட்சித்தலைவர் சுஷ்மாசுவராஜ் நேற்று புஷ்பவனத்துக்கு வருகை புரிந்தார். இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஜெயகுமார் மனைவி முருகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்துக்கு அவர் ஆறுதல் கூறி, இரண்டு லட்சம் ரூபாயை, பா.ஜ., சார்பில் நிதியுதவியாக வழங்கினார். பின், அங்குள்ள மாரியம்மன் கோவிலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகளிடம் பேசினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.



அதன்பின், அவர் கூறியதாவது: கடந்த ஒரு மாதத்துக்குள், தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன், ஜெயகுமார் ஆகிய மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இதுபற்றி பேசியுள்ளேன். தமிழகம் சார்பில், பாரதிய ஜனதா எம்.பி.,க்கள் இல்லை என்றாலும், இங்குள்ள மீனவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் பேசுவேன். கச்சத்தீவை மீட்பது தொடர்பாக அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்தபின், இதுபற்றி நடவடிக்கை எடுக்க பாரதிய ஜனதா வலியுறுத்தும்.

இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள், தமிழக மீனவர்கள் என்பதைவிட, இந்திய மீனவர்கள் என்று கூறுவதுதான் சரி. ஒரு மாதத்துக்குள் இரு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்கட்சி என்ற முறையில் அவர்களுக்காக பாராளுமன்றத்தில் வாதாடுவது எங்கள் கடமை. மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச, உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்குழு செயல்படவில்லை. அக்குழு செயல்பட மத்திய அரசுடன் பேசுவோம். மீனவர்கள் பிரச்னையையும், அவற்றைத் தீர்க்க தேவையான வழிகளையும் மீனவர்கள் பிரதிநிதிகள் இங்கு தெரிவித்தனர். இதுபற்றி, பாராளுமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும். ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த சுஷ்மா சுவராஜுடன், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தென்னிந்திய செயலாளர் முரளிதரராவ், அகில இந்திய முன்னாள் தலைவர் பங்காருலட்சுமணன் ஆகியோர் வந்தனர். இவர்களை அக்கட்சியின் தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை ராஜேந்திரன், மாநில செயலாளர் முருகானந்தம், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், தஞ்சை கோட்ட தொழில் பிரிவு பொறுப்பாளர் அசோக், முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

No comments:

print