Tuesday, February 8, 2011

2 ஆண்டில் 1,756 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் :108 ஆம்புலன்ஸ் திட்ட மாவட்ட மேலாளர் "பெருமிதம்

திருச்சி: ""திருச்சி மாவட்டத்தில் "108' ஆம்புலன்ஸ் மூலம் கடந்த இரண்டாண்டில் 1,756 உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது,'' என்று 108 ஆம்புலன்ஸ் திருச்சி மாவட்ட மேலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சிறப்பாக முறையில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகத்துக்கான புதிய அலுவலகம் திறப்பு விழா மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் மகேசன் காசிராஜன் பங்கேற்று 108 ஆம்புலன்ஸ் திட்ட நிர்வாக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழாவில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மோகனசுந்தரம், தமிழ்நாடு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், அரசு மருத்துவக் கல்லூரி துணைமுதல்வர் அலீம், திருச்சி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் பாலமுருகன், செயல் இயக்குனர் ஜனத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலகம் திறப்புக்கு பின், மாவட்ட மேலாளர் பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2008 செப்.,ல் 108 அவசர கால இலவச ஆம்புலன்ஸ் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 385 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் விபத்து, பிரசவம், அவசர கால சிகிச்சைக்கு உதவும் வகையில் தமிழக அரசால் துவக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டம் திருச்சி மாவட்டத்தில் 2008 டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 14 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் 40 ஆயிரத்து 745 அவசர கால தேவைகளுக்கு சேவை அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ், 11 ஆயிரத்து 684 சிக்கலான பிரசவத்துக்கு உதவியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் கடந்த இரண்டாண்டில் 1,756 விலைமதிப்பில்லா உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸிலேயே 215 பிரசவம் நடந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் 385 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை வரும் மார்ச் இறுதிக்குள் 545ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* 108ல் முடியும் "108' மொபைல் எண்கள்: 108 திட்டத்தில் மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் 385 ஆம்புலன்ஸ்களுக்கும் ஏர்டெல் மொபைல்ஃபோன் வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் கடைசி எண் அனைத்தும் 108லேயே முடிவதாக உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கும் 108ல் முடியும் படி மொபைல்ஃபோன் வழங்கப்பட்டுள்ளது.
An 108 EMRI ambulance in Tiruchi. The ambulance service caters only to emergencies, and does not accept patients who seek to go to hospital for non-critical ailments

No comments:

print