Tuesday, February 8, 2011

வி.ஏ.ஓ.,- ஆர்.ஐ., பணியிடங்களுக்குஆட்கள் நியமிக்காததால் மக்கள் அவதி

ஆர்.ஐ., பணியிடம் காலியாக உள்ளதால், வருவாய்த்துறை பணிகள் அடியோடு ஸ்தமித்துள்ளது. பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சேலம் மாவட்டம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட கிராமங்களில், வி.ஏ.ஓ., பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. ஆத்தூர் தாலுகாவில், ஆத்தூர் டவுன், தலைவாசல், காட்டுக்கோட்டை, மல்லியக்கரை, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கல்வராயன்மலை ஆகிய ஏழு வருவாய் பிர்க்கா உள்ளன. அதில், 77 வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 52 வி.ஏ.ஓ.,கள் மட்டுமே உள்ளதால், காலி பணியிடங்களுக்கு கூடுதல் பொறுப்புகளாக வேலை பார்த்து வருகின்றனர்.நரசிங்கபுரம், கீரிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், அபிநவம், முள்ளுவாடி, லட்சுமணசமுத்திரம், அக்கிச்செட்டிபாளையம், பைத்தூர் (தெற்கு) எடப்பட்டி, சீலியம்பட்டி, அம்மம்பாளையம், சிறுவாச்சூர் (வடக்கு), கல்லேரிப்பட்டி, ஓலப்பாடி, அப்பமசமுத்திரம், கல்யாணகிரி, சொக்கநாதபுரம், தமயனூர், மலையாளப்பட்டி, கொத்தாம்பாடி, வரகூர், காட்டுக்கோட்டை, ராமநாயக்கன்பாளையம் (வடக்கு), புனல்வாசல் உள்பட, 24 வி.ஏ.ஓ., பணியிடம் காலியாக இருப்பதால், அந்த அலுவலகம் பல மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.

அதேபோல் காட்டுக்கோட்டை, ஏத்தாப்பூர், கல்வராயன்மலை, மல்லியக்கரை ஆகிய மூன்று பிர்க்காவில், ஆர்.ஐ., பணியிடமும் காலியாக உள்ளது. அந்த பணியிடங்களை அருகிலுள்ள, ஆர்.ஐ.,கள் கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதால், சான்று வழங்குதல் போன்ற அத்தியவசிய பணிகள் பாதித்துள்ளது.தவிர, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், ஜாதி, வருவாய், இருப்பிடம் போன்ற சான்றுகள் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படும் நிலை நீடிக்கிறது.இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியதாவது:ஆத்தூர் தாலுகாவில், 2.72 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 24 வி.ஏ.ஓ.,களின் பணியிடம், பல மாதங்களாக காலியாக இருக்கிறது. ஆத்தூர், தாசில்தாருக்கு ஒரு காரும், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆகிய இருவரும், மாதத்தில், 15 நாள் வீதம் பயன்படுத்தி கொள்ள மற்றொரு காரும் அரசு வழங்கியது. ஆத்தூர் ஆர்.டி.ஓ.,வுக்கு வாகனம் இல்லாததால், தனி தாசில்தாருக்கு வழங்கப்பட்ட காரை ஆர்.டி.ஓ., பயன்படுத்தி வருகிறார்.அதனால், தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் ஆய்வு போன்ற பணிகளுக்கு மொபட், பஸ்களில் செல்லும் நிலை உள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில் பணி காலியிடம் நிரப்பாமல் உள்ளதால், கூடுதல் பணி சுமையில் வருவாய் அலுவலர்கள் திணறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

print