சென்னை : ""மேம்பாலங்கள் கட்டியதால் எங்களுக்கு புகழா, பெருமையா என்றால் கிடைத்தது ஜெயில்தான்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
ரூபாய் 23 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் கூடுதல் மேம்பாலம், பூங்காக்கள், புதிய கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட 54 வளர்ச்சிப் பணிகளின் திறப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: மக்களின் வசதிக்காக நமது சுக, துக்கங்களை விட்டுவிட்டு பாடுபட வேண்டும். அதன் பயன்தான் சென்னையில் உள்ள பாலங்கள். மேம்பாலங்கள் கட்டியபின், ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த பாலங்களை தோண்டி; ஊழலை தேடி; ஊழலை பாக்கெட்டில் வைத்தவர்கள் நடவடிக்கை எடுத்தனர். மேம்பாலங்கள் கட்டியதால் எங்களுக்கு புகழா, பெருமையா என்றால் கிடைத்தது ஜெயில்தான். ஊழலை, பாலத்திற்கு கீழ் ஒளித்து வைத்ததாக சிறையில் தள்ளினர்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே முட்புதர்களாக இருந்த இடத்தில் ஓட்டல் அமைத்து, மாலையில் பொழுதுபோக்குக்காக அங்கு சிலர் வருவர். இந்த இடம் என் கண்ணை உறுத்தியது. விசாரித்தபோது முன்பிருந்த ஆட்சியினர், அரசு இடத்தை யாருக்கோ பரிசாக கொடுத்தது தெரியவந்தது. அவர்கள் அந்த இடத்தை வைத்துக் கொண்டு படாதபாடு படுத்தினர். நடக்காதது எல்லாம் நடந்தது. அந்த இடம் யாரிடம் இருந்தது என்பது தி.மு.க.,வுக்கு வந்துள்ள சேகர்பாபுவுக்கு தெரியும். நாங்கள் விடாமல் சுப்ரீம்கோர்ட் வரை சென்று இடத்தை மீட்டு, செம்மொழிப் பூங்கா அமைத்துள்ளோம். நாங்கள் சிங்கார சென்னையாக மாற்றும் நடவடிக்கையை எடுக்காவிட்டால், இது சிங்காரியின் சென்னையாக இருந்து இருக்கும். அனைத்து தரப்பு மக்களும் பயன் தரக்கூடிய இன்னும் பல வசதிகளை தொடர்ந்து செய்வோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவுக்கு மேயர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷண், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment