தமிழக அரசியலில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், 2006 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, கடைசி நேர மாற்றங்கள், வரும் சட்டசபை தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 2004ல், லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணி 57.4 சதவீத ஓட்டுகளை பெற்று, தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல, 2006 சட்டசபை தேர்தலிலும், ம.தி.மு.க., மட்டுமே அ.தி.மு.க., அணிக்கு தாவிய நிலையில், தி.மு.க., கூட்டணியின் ஓட்டு சதவீதம், 44.69 ஆக குறைந்தது. அதே நேரத்தில், 2004ல் பா.ஜ.,வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க., அணி, 34.84 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது. பின், 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து 38.62 சதவீத ஓட்டுகளை பெற்றதுடன், 69 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. கடைசியாக நடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பா.ம.க., ஆகிய கட்சிகள் வெளியேறி அ.தி.மு.க., வுடன் அணி சேர்ந்தன. அப்படியிருந்தும், தி.மு.க., 106 சட்டபை தொகுதிகளிலும், காங்கிரஸ் 48, விடுதலைச் சிறுத்தைகள் ஒன்பது என மொத்தம் 163 சட்டசபை தொகுதிகளில் கூடுதல் ஓட்டுகளை பெற்றன. அதேநேரத்தில், அ.தி. மு.க., 47, இந்திய கம்யூனிஸ்ட் 8, மார்க்சிஸ்ட் 4, ம.தி.மு.க., 9, பா.ம.க., ஒன்று என மொத்தம் 69 தொகுதிகளில் அதிக ஓட்டுகளை பெற்றன.
அந்த தேர்தலில், இலங்கை பிரச்னை தவிர, தி.மு.க., அரசின் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்கவில்லை. மேலும், மத்தியில் எந்த அரசு அமையும் என்பதையும் எதிர்க்கட்சிகளால் உறுதியாக கூற முடியவில்லை. எனவே, நிலையான ஆட்சி என்ற கோஷம் தி.மு.க., அணிக்கு பலன் அளித்தது. ஆனால், தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசுக்கு எதிரான பல்வேறு விவகாரங்கள் உள்ளன. அதுமட்டுமன்றி, அ.தி. மு.க., அணியில் பா.ம.க., வெளியேறிய நிலையில், தே.மு.தி.க., சேருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல, தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதிக ஓட்டுகளை பெற்ற புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி போன்றவை அ.தி. மு.க., அணியில் சேர்ந்துள்ளன. இதனால், அ.தி. மு.க.,வுக்கு குறிப்பிட்ட சில தொகுதிகளில் கடந்த முறையை விட கூடுதல் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தே.மு.தி.க.,வை பொறுத்தவரை, 29 தொகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்றது. இதில், 22 தொகுதிகள் வடமாவட்டங்களில் உள்ளவை. அதேபோல, 10 ஆயிரத்துக்கும் மேல், 20 ஆயிரத்துக்கு உள்ளாக 139 தொகுதிகளில் தே.மு.தி.க., ஓட்டுகளை பெற்றுள்ளது. இதில், 100 தொகுதிகள் வரை, வடமாவட்டங்களில் பெற்றவை. எனவே, பா.ம.க.,வின் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்பை, தே.மு.தி.க.,வின் வருகையால் அ.தி.மு.க., சரிகட்ட முடியும். எனினும், தி.மு.க., அணி 163 தொகுதிகளில் கூடுதல் ஓட்டுகளை பெற்றிருந்தாலும், அவற்றில் 80 தொகுதிகளில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., சேர்ந்து பெற்ற ஓட்டுகளை விட கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. எனவே, இந்த 80 தொகுதிகள் தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன. பா.ம.க.,வும் சேரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், அ.தி.மு.க., அணி 17 தொகுதிகளில் 2,000 ஓட்டுக்கும் குறைவான வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதில், குறிப்பாக, ஜெயங்கொண்டம் தொகுதியில் 4 ஓட்டு வித்தியாசத்திலும், செங்கல்பட்டில் 134 ஓட்டு வித்தியாசத்திலும், சேலம் வடக்கில் 138 ஓட்டுகள் வித்தியாசத்திலும், பெரம்பூரில் 500 ஓட்டுகள் வித்தியாசத்திலும், ஒட்டன்சத்திரம் மற்றும் திருச்சி கிழக்கில் தலா 200 ஓட்டுகள் வித்தியாசத்திலும் அ.தி.மு.க., அணி வாய்ப்பை இழந்துள்ளது. இதுதவிர, 52 சட்டசபை தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுக்கும் குறைவான வித்தியாசத்தில், அ.தி.மு.க., வாய்ப்பை இழந்துள்ளது. எனவே, இந்த 69 தொகுதிகள் அ.தி.மு.க., அணிக்கு வரும் தேர்தலில் சாதகமாக அமையும். ஏற்கனவே வெற்றி பெற்ற 69 தொகுதிகள், தே.மு.தி.க., வருகையால் கிடைக்கும் தொகுதிகள் மற்றும் குறைந்த வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்த 69 தொகுதிகள் என அ.தி.மு.க., ஆட்சி அமைக்க தேவையான அளவு தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தி.மு.க.,வும் 10 தொகுதிகளில் 2,000 ஓட்டுகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்துள்ளது. இதில், திருவிடைமருதூரில் 13 ஓட்டு வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்துள் ளது. இதுதவிர, 42 தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வாய்ப்பை தி.மு.க., இழந்துள்ளது. எனவே, இந்த தொகுதிகளில் தி.மு.க., கவனம் செலுத்தினால், கூடுதலாக 52 தொகுதிகள் கிடைக்கும்.
இப்படிப்பட்ட நிலையில், தி.மு.க., கூட்டணி அமையும் விதம் மற்றும் தொகுதி பங்கீடு போன்றவை உறுதியான பின் தான், அந்த அணியின் பலம் தெரியவரும். எனினும், தி.மு.க., ஆட்சியால் பலனடைந்த வாக்காளர்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் போன்ற ஓட்டு வங்கி, வெற்றிக்கு கை கொடுக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., தவிர மற்ற கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., அரசின் பலவீனங்களை மக்களிடம் கொண்டு சென்று, மனமாற்றத்தை ஏற்படுத்தினால் இக்கட்சி பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளது. பிரசார பலத்தை பொ றுத்தவரை, தி.மு.க.,வை விட அ.தி.மு.க., அணிக்கு சாதகமான அம்சங்கள் நிறைய உள்ளன. தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வலுவான விவகாரங்கள் கையில் உள்ளன. ஏற்கனவே, ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் போன்று வலுவாக பிரசாரம் செய்யக் கூடிய தலைவர்கள் உள்ள நிலையில், தே.மு.தி.க.,வும் இணையும் பட்சத்தில், விஜயகாந்தின் பிரசாரம் அதற்காக கூடும் கூட்டம் போன்றவை அணிக்கு வலு சேர்க்கும். அதாவது, எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது என கடைசி நேரம் வரை முடிவு செய்யாமல் இருக்கும் வாக்காளர்களை தங்கள் பக்கம் திருப்ப, இந்த பிரசாரம் கை கொடுக்கும். ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் சிதறாமல், தங்கள் அணிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இந்த கணக்குகளில், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க ஓட்டுகளை பெற்ற கொங்கு நாடு முன்னேற்ற கழகம், சில தொகுதிகளில் அதிக ஓட்டு பெற்ற பாரதிய ஜனதா ஆகியவை சேர்க்கப்படவில்லை. பா.ஜ., தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளதால், கடந்த முறை பெற்ற அதே அளவு ஓட்டுகள் இம்முறையும் கிடைக்கலாம்.
தி.மு.க., அணிக்கு சாதகமான விஷயங்கள்: அரசின் இலவச திட்டங்கள், கிராமப்புறங்களில் செய்துள்ள மேம்பாட்டு பணிகள், நகர்புறங்களில் செய்துள்ள உள்கட்டமைப்பு பணிகள். ஆளுங்கட்சியாக தேர்தலை சந்திப்பது மற்றும் வாக்காளர்களை தேர்தல் நேரத்தில், "கவரும்' விதம், கூட்டணி தேர்தல் பணியில் ஈடுபடும் தொண்டர்களின் பலம்.
தி.மு.க., அணிக்கு பாதகமான விஷயங்கள்: ஆட்சியில் எங்கும் லஞ்சம், விதிகள் மீறல், "ஸ்பெக்ட்ரம்' ஊழல். ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள், குறிப்பாக, உள்ளாட்சி பிரதிநிதிகளின் நடவடிக்கைகள்; கூட்டணி கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களிடையே ஈடுபாடு இல்லாதது. குடும்ப அரசியல் தலையீடுகள். விலைவாசி உயர்வு.
அ.தி.மு.க., அணிக்கு சாதகமான விஷயங்கள்: பிரசார பலம் மற்றும் வலுவாக பிரசாரம் செய்ய உள்ள பிரபலங்கள். அதற்கு ஏற்ப நாட்டில் உள்ள பிரச்னைகள். ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள், தி.மு.க., அணிக்கு பாதகமான அனைத்து அம்சங்கள்.
No comments:
Post a Comment