Wednesday, February 2, 2011

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கு சிக்னல்: கருத்து கேட்ட தலைமை

வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள், காய் நகர்த்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி குறித்து, மாவட்ட செயலர்களை அழைத்து, அ.தி.மு.க., தலைமை கருத்து கேட்டுள்ளது.

இன்று, தை அமாவாசை என்பதால், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, அ.தி.மு.க., தலைமை வெளியிடலாம் என, கட்சியினரிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டணி குறித்த பேச்சு, கட்சிகளிடையே துவங்கி உள்ளது. கம்யூ., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இதில், முதல் கட்டமாக கம்யூ., கட்சியினருடன், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை, அ.தி.மு.க., சார்பில் நடத்தப்பட்டுள்ளது. பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன், டில்லியில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி, "தி.மு.க., கூட்டணியில், காங்., - பா.ம.க., உள்ளிட்ட நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளன' என, தெரிவித்தார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், "கூட்டணி குறித்து கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்படும். முதல்வர் கருணாநிதி அவரது விருப்பத்தை தெரிவித்துள்ளார்' என, கூறினார்.பா.ம.க., எந்த கூட்டணியில் இடம் பெறும் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

அதே நேரம், தே.மு.தி.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கான நெருக்கம் அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம், அ.தி.மு.க., தலைமை, அக்கட்சியின் அனைத்து மாவட்ட செயலர்களை, அவசரமாக சென்னைக்கு அழைத்து திடீர் ஆலோசனை நடத்தியுள்ளது. ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 2006 தேர்தலில் தே.மு.தி.க., ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக பெற்ற ஓட்டுகள், லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகள். தற்போது, ஓட்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்ற விவரங்களையும், தே.மு.தி.க.,வுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்தும், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, கருத்துகளை அறிக்கையாக கேட்டு பெற்றுள்ளது.

மாவட்ட செயலர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு அடிப்படையில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி மற்றும் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், தொகுதி வாரியாக, அ.தி.மு.க.,வில் போட்டியிட தகுதியான நபர்கள் குறித்த பட்டியல் தயாரித்து, வக்கீல் பிரிவு நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் போட்டிக்குரியவர்கள், வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனரா அவர்கள் மீது வழக்கு உள்ளதா என்பது குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளதாக, அ.தி.மு.க., வக்கீல் பிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இன்று, தை அமாவாசை என்பதால், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, தே.மு.தி.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர்.தே.மு.தி.க., கூட்டணி முடிவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தி, அக்கட்சிகளுக்கும் குறிப்பிட்ட தொகுதி ஒதுக்கப்படும்.பா.ம.க., மதில் மேல் பூனையாக, இருப்பதால், அக்கட்சியும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து மறைமுக பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அ.தி.மு.க., தலைமை சுறுசுறுப்பாக, "கூட்டணி' குறித்து காய் நகர்த்தி வருவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜெயலலிதாவை சந்திக்கிறார் பிரேமலதா அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி வருமா? : மிகுந்த அரசியல் பரபரப்பிற்கு இடையே, பெரிதும் எதிர்பார்க்கப்படும் அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உறுதியாகும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. வரும் 7ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச, தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தை பெங்களூரில் கடந்த 25ம் தேதி ரகசியமாக நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மற்றும் அ.தி.மு.க., தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.அடுத்த கட்டமாக, கூட்டணியை இறுதி செய்யும்வகையிலான முக்கிய பேச்சுவார்த்தை, வரும் 7ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது. இதற்காக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்துப் பேச தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி அமைப்பது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த தேர்தல் குழுவை நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இக்குழுவில் சுதீஷ், பாண்டியராஜன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் இடம் பெறுகின்றனர். இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ளது. இக்குழுவினர் தான், ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை இறுதி செய்யவுள்ளனர். தவிர்க்க முடியாத காரணத்தால், 7ம் தேதி சந்திப்பு நடக்கவில்லையெனில், 9 அல்லது 11ம் தேதி நடக்கும் என, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெ., - பிரேமலதா சந்திப்பு!விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் சகோதரி மகளுக்கும், சென்னை ஆவடியை சேர்ந்த தொழிலதிபர் மகனுக்கும் வரும் 21ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணத்திற்கான அழைப்பிதழை, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவிடம், பிரேமலதா மற்றும் அவரது சகோதரி குடும்பத்தினர் நேரில் சென்று வழங்கவுள்ளனர். கூட்டணி குறித்து அதிகாரபூர்வமான சந்திப்பு நடப்பதற்கு முன்னதாக, ஜெயலலிதா - பிரேமலதா சந்திப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

print