தமிழகத்தில், சட்டசபை தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு, தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகள், அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் இல்லாத வகையில், பிரசார சுவடே தெரியாத அளவுக்கு, அரசியல்வாதிகளை கதிகலங்க செய்திருக்கும் கெடுபிடிகளை பார்த்து, பொதுமக்கள், மனதார பாராட்டுகின்றனர். பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவித்து, முறைகேடுகளை தவிர்ப்பதிலும் அக்கறை செலுத்த துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில், வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஏப்., 11ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிகிறது. தேர்தல் பிரசார கடைசி நாளுக்கும், தேர்தல் நடக்கும் நாளுக்கும் இடைப்பட்ட ஒரு நாள், தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு, கடந்த லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புகளை வாரி வழங்கி வெற்றி வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றினர்.இது குறித்து, எதிர்க்கட்சிகள் கடுமையாக புகார் தெரிவித்தன. இதே பாணியில், வரும் சட்டசபை தேர்தலில் பணம் புகுந்து விளையாடும் என கருத்துக்கள் எழுந்தன.தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்து, தேர்தல் கமிஷன் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தத் துவங்கியது.
கட்சிகளின் பிரசாரம் எப்படி இருக்க வேண்டும், பிரசார நேரம், பிரசாரத்திற்கு எந்தெந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும், போஸ்டர் ஒட்டக்கூடாது, சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது என, பல விதங்களிலும் பிரசாரத்திற்கு கெடுவிதித்தது.பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளருடன், எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது வரை, பல வித உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும், அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை, இடமாற்றம் செய்தது. தேர்தல் பணிக்கு வரும் ஊழியர்கள் விஷயத்திலும் கெடுபிடி தொடர்கிறது.
இது போக, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளே வரும் வாகனங்களையும், வெளியே செல்லும் வாகனங்களையும் பரிசோதனை செய்வது, பணம் பொருட்களை கைப்பற்றுவது, வீடு புகுந்து சோதனை நடத்துவது, கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களில் சோதனை நடத்துவது என, தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே போகிறது.இதை பார்த்து, அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. முதல்வர் கருணாநிதியே தேர்தல் கமிஷனின் நடவடிக்கை குறித்தும், அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது பற்றியும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
தமிழகத்தில் பல இடங்களில் கட்சிகள் பணப் பட்டுவாடா செய்வதாக செய்தி கிடைத்ததும், சமீப நாட்களாக தேர்தல் அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல், தகவல் வந்த இடத்திற்கு சென்று சோதனையில் இறங்கியுள்ளனர்.இதை பார்த்து, ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த மக்களே, எங்கேயாவது பணப் பட்டுவாடா நடந்தால், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை போய் கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மக்களை கவர்ந்துள்ளதோடு, தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு நாமும் உதவலாமே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், மதுரை வடக்கு தொகுதியில், மேலமடை பகுதியில் ஆளுங்கட்சி சார்பில் பணப் பட்டுவாடா செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி சிலர், தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த பகுதிக்கு அதிகாரிகள் வந்து எச்சரித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
நாமக்கல் - மோகனூர் சாலையில், தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பங்கேற்ற கட்சியினருக்கு தங்க நகையுடன் சாப்பாடு பொட்டலம் வழங்குவதாக, தேர்தல் தணிக்கை குழுவினருக்கு புகார் வந்துள்ளது. தணிக்கைக்குழு தலைவர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கேன்டீனுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, முட்டையுடன், 500 தக்காளி சாதம் பொட்டலம் தயார் நிலையில் இருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக பிரித்து, கிளறி பார்த்தனர். முட்டைகளையும் உடைத்து சோதனை செய்தனர். சாதப்பொட்டலத்தில் தங்கம் இல்லை என்பதை உறுதிசெய்தப்பின் அவற்றை மக்களுக்கு வினியோகம் செய்ய அனுமதி அளித்தனர்."இந்த செலவு, வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த வீ.கூட்ரோடு - வேப்பூர் சாலையில் நேற்று காலை 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளிடம் சோதனை செய்தனர். இதில், சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சுப்ரமணி(35) என்பவர், 4,300 கிலோ வெள்ளி கட்டியை உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றது தெரிந்தது.ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை கும்பகோணம் ரோட்டில் உள்ள கோடியம்மன் கோவில் அருகே, தேர்தல் சிறப்புப் படையினர், ஒரு டாடா மினிலாரியில், 58 பெரிய பெட்டிகளில், 180 பிரீத்தி மிக்சி, அதற்கான ஜாருடன் கும்பகோணம் நோக்கி எடுத்துச் சென்றதை கைப்பற்றி, வருவாய்த்துறையினர், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.இப்படி தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள், தமிழகம் முழுவதும் தொடர்கிறது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டும் கிடைத்து வருகிறது.
இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு : இலவச அறிவிப்புகள் குறித்து குறைகள் இருந்தால், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட அமைப்புகளை அணுகலாம் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட்டில், "டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார். அவருக்கு குறைகள் இருந்தால், தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய, மாநில அரசுகள் உள்ளிட்ட அமைப்புகளை அணுகலாம். அப்போது, இப்பிரச்னையை சட்டப்படி ஆராய்வர். இம்மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில், "டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு:கிரைண்டர், லேப் - டாப் என, இலவசப் பொருட்களை வழங்குவதாக, தேர்தல் அறிக்கைகளில் அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. இந்த கட்சிகளுக்கு ஓட்டு அளித்தால், இலவசமாக இதையெல்லாம் தருவேன் என்பது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போலாகும், பொதுமக்கள் பணத்தில் தான் இதை வழங்குகின்றனர்.நம் நாட்டின் வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களை அறிவிக்காமல், வாக்காளர்களை கவருவதற்காக இலவசங்களை அறிவித்துள்ளனர். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் கட்சிகள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கிரைண்டர், "டிவி'க்களை வாங்கித் தரவில்லை. இதெல்லாம், பொதுமக்களின் பணம்.நதி நீர் பிரச்னை, கல்வி வளர்ச்சி, மருத்துவ வசதிகள் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இலவசங்களை விட இதற்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இலவசங்கள் குறித்து தேர்தல் கமிஷன், தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோருக்கு மனு அனுப்பினேன். அரசியல் கட்சிகளின் இந்த இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை, தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.