Wednesday, March 30, 2011

தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜயகாந்த் மீது பாமக புகார்

சென்னை: சென்னை கோட்டையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை இன்று காலை பாமக கட்சியினர் சந்தித்தனர். அப்போது ஒரு மனு கொடுத்தனர். பின்னர் வெளியே வந்த பாமக சட்ட பாதுகாப்பு குழு தலைவர் வக்கீல் கே.பாலு, நிருபர்களிடம் கூறியது: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோரை பற்றி தரக் குறைவாகவும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி வருகிறார். பாமக&விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்ததை விமர்சனம் செய்து, இரு சமூகத்தினர் இடையில் வன்முறையை தூண்டும் வகையில் நிதானம் இழந்து பேசி வருகிறார். அரசியல் உள்நோக்கத்தோடு பாமக தொண்டர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது சாலையை மறித்துக் கொண்டு பிரசாரம் செய்கிறார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வரும் விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியை கேட்டுக் கொண்டோம். இவ்வாறு வக்கீல் பாலு கூறினார்.

No comments:

print