Sunday, March 27, 2011

சிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு-சமூக பொருளாதார மாற்றத்திற்கு அறைகூவல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சமூக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், யோசனைகளைக் கொண்டதாக இந்த தேர்தல் அறிக்கை உள்ளது.


தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக தமிழகத்தில் தொழில்களும் பொருளாதாரமும் நலிந்து, மக்களின் துயரங்கள் பெருகி வருவதால் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனும் நாசகரக் கொள்கைகளை முறியடிக்கவும், மக்கள் நலன் காக்கும் மாற்று கொள்கையை முன்நிறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பாதுகாக்கவும் அவற்றை மேம்படுத்தவும் கட்சி பாடுபடும். இத்தொழில்களுக்கு வரிச்சலுகை, மின்சாரம், கடன்வசதி மற்றும் கட்டமைப்புகள் பலப்பட அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொள்ளும்.

சிறு வணிகத்தில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க கட்சி உறுதியாகப் போராடும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்யவும், பதுக்கலை ஒழிக்கவும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பொது விநியோக முறை மூலம் நியாய விலையில் அனைவருக்கும் வழங்கவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் தலா 35 கிலோ அரிசி வழங்கிடவும், உணவுப் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தவும் கட்சி பாடுபடும்.

மின்தடை அறவே ரத்து செய்யப்படவும், தடையில்லா மின்சாரம் அனைத்துப் பகுதியினருக்கும் கிடைத்திடும் வகையில் புதிய மின் திட்டங்கள் கொண்டுவரப்படவும் கட்சி பாடுபடும்.

மின்வாரிய பிரிவினையை ரத்து செய்ய குரல் கொடுக்கும். இலவச மின்சாரம் கோரி மனுச் செய்த தகுதியுடைய அனைவருக்கும் உடனுக்குடன் மின்இணைப்பு கிடைக்க போராடும்.

சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், மணல் கொள்ளை, மற்றும் நில மோசடிகளை முடிவுக்கு கொண்டு வரவும் கட்சி போராடும்.

கிரிமினல்மயமாகிவரும் அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி போராடும்.

வேலையின்மை பெருகி இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி வரும் நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தையும் நிரப்பவும் கட்சி பாடுபடும். வேலையில்லா காலத்திற்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்க கட்சி வற்புறுத்தும்.

தற்போதைய நடைமுறையில் உள்ள பல்வேறு நலத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் அகற்றப்படவும் அவற்றை மேம்படுத்தி விரிவுபடுத்தவும் கட்சி போராடும்.

நிலச் சீர்திருத்த சட்டங்களை அமலாக்கவும், நிலக்குவியலை முடிவுக்குக் கொண்டு வரவும், மிச்ச நிலங்களையும், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களையும் நிலமற்ற தலித் மற்றும் ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் பகிர்ந்து வழங்கவும் கட்சி பாடுபடும்.

லட்சக் கணக்கான ஏழை, எளிய மக்கள் குடியிருக்க வீடுகளின்றி அவதிப்படுகின்றனர். இந்நிலையைப் போக்கிட இலவச வீட்டுமனை வழங்கவும், தற்போது குடியிருக்கின்ற வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கவும், கான்கிரீட் வீடுகள் கிராமம், நகரம், மாநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடிசைவாசிகள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் வீட்டு வசதித் திட்டம் உருவாக்கிடவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும். வளர்ச்சிப் பணி தொழில்மயம் என்ற பெயரால் சென்னை மாநகரில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களை வெளியேற்றும் முயற்சிகளைத்தடுத்து நிறுத்திடப் போராடும். கோவில் நிலங்களில் குடியிருப்போர் நலன்களைப் பாதுகாத்திட கட்சி குரல் கொடுக்கும்.

தேசிய வேலை உறுதிச்சட்டத்தை கிராமங்களில் மட்டுமன்றி நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கும் விரிவுபடுத்திடவும், வருடத்தில் குறைந்தபட்சம் 150 நாட்கள் வேலை வழங்கிடவும், குறைந்தபட்ச தினக்கூலி ரூ.200/ வழங்கிடவும் அரசை வற்புறுத்தும்.

விவசாய விளை நிலங்களை தொழில் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஒப்புதல் ல்லாமல் கையகப்படுத்துவதற்கு எதிராக கட்சி போராடும். விவசாயிகள் ஒப்புதலுடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய நஷ்ட ஈடு கிடைக்கப் போராடுவதோடு அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் குரல் கொடுக்கும்.

அரசுப் பணிகளில் தொகுப்பூதியம், தற்காலிகம், காண்டிராக்ட் என்ற அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பணிவரன்முறையுடன் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிடவும், சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர உரிமைகள் வழங்கவும் கட்சி குரல் கொடுக்கும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு காணவும் கட்சி பாடுபடும்.

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போன்றோரின் ஊதிய உயர்வுக்கும், பணி நிலைமைகளில் முன்னேற்றம் காண்பதற்கும் கட்சி போராடும். பாதகமான புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்படவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவும், அவர்களது சங்கங்களுக்குத் தேர்தல் மூலம் அங்கீகாரம் வழங்கவும் வற்புறுத்தப்படும்.

விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கப்பெற கட்சி பாடுபடும். குறிப்பாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 1,500 வழங்கிடவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 3,000 வழங்கிடவும் கட்சி குரல் கொடுக்கும்.

வங்கிகளும், கூட்டுறவு அமைப்புகளும் வழங்கிய விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்யவும், கந்துவட்டிக் கொடுமைகளிலிருந்து ஏழை நடுத்தர விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேவையான புதிய கடன்களை அரசுடமை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாமல் வழங்கவும் கட்சி வற்புறுத்தும்.

விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்க உரிய தலையீடுகள் செய்யப்படும்.

முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், முல்லைப் பெரியார், காவிரி, நெய்யாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு விரைந்து கிடைத்திடவும் கட்சி பாடுபடும். பாசன வசதியைப் பெருக்கிட புதிய அணைகள் கட்டுவது, ஏரிகளை ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கட்சி பாடுபடும்.

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவும், மானிய விலையில் அவர்களுக்கு டீசல் வழங்கவும், இலங்கை கடற்படையினரால் நடைபெறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய - மாநில அரசுகளை கட்சி வற்புறுத்தும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வும், அவர்களுக்கு சம உரிமையும் கிடைக்க கட்சி பாடுபடும். முள்வேலி முகாம்களில் இன்னமும் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களை அவர்களின் பூர்வீகக் குடியிருப்புப் பகுதிகளில் மீள் குடியமர்த்தவும், குடியமர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவும் மத்திய அரசு தலையிட கட்சி வற்புறுத்தும்.

இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில சுயாட்சி வழங்க உரிய தலையீடுகளைச் செய்யும். இலங்கையில் தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரம் பாதுகாக்கப்படவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொழில், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் பலப்பட மத்திய அரசின் மூலம் உரிய நிர்ப்பந்தங்களைக் கட்சி கொடுக்கும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும்.

அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்க அங்கீகாரம் கிடைத்திடவும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகளை உத்தரவாதப்படுத்திடவும், தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்கவும் கட்சி போராடும்.

கல்லூரிக் கல்வி வரை இலவசக் கல்வி வழங்கிடவும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், தலித் மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளச் செய்யவும் கட்சி பாடுபடும்.

சமச்சீர் கல்வி தமிழகத்தில் முறையாக அமலாக்கிட கட்சி பாடுபடும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை, எளிய நடுத்தரக் குடும்ப மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ரயில் மற்றும் பஸ் பாஸ் வழங்க கட்சி வற்புறுத்தும்.

பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்,பழங்குடி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்திடவும், அவர்களுக்கு தரமான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும்,

இவற்றிற்குத் தேவையான அரசு மானியம் உயர்த்தப்படவும் கட்சி பாடுபடும்.

கட்டுமானப் பொருட்களின் விலைஉயர்வைத் தடுக்கவும், அனைவருக்கும் வீட்டுவசதி கிடைப்பதற்கான திட்டங்களை உருவாக்கவும் கட்சி பாடுபடும்.

காவல் துறை சீர்திருத்தத்திற்காக கட்சி குரல் கொடுக்கும். மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும், சிறைத்துறை சீர்திருத்தத்திற்கும் கட்சி பாடுபடும். காவலர்களுக்குச் சங்கம் அமைக்கும் உரிமை வழங்க கட்சி வற்புறுத்தும்.

ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்தவும், ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தும் இடங்களை பரவலாக்கவும், போராட்ட உரிமைகளை மேம்படுத்தவும் கட்சி குரல் கொடுக்கும்.

கூட்டுறவுத் தேர்தலை முறையாகவும், ஜனநாயக ரீதியாகவும் உடனடியாக நடத்த கட்சி போராடும். கூட்டுறவுத் தேர்தலை நடத்திட சுயேச்சையான அமைப்பை உருவாக்கவும், கூட்டுறவு நிறுவனங்களின் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் கட்சி பாடுபடும்.

பொதுவாழ்வில் மக்கள் நலனுக்கே முழு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்பும், நேர்மையும், தூய்மையும் நிறைந்த அரசியல் பண்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியுடன் பற்றிநிற்கும்; அதற்காகத் தொடர்ந்து போராடும்.

இந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுக - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி மாற்று ஆட்சியைக் கொண்டு வருவதன் மூலமே தமிழக மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.

No comments:

print