கோவில்பட்டி: தேர்தல் வெற்றிக்கு பிறகு எங்கள் எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு பணியாற்றவில்லை என்றால் நான் சும்மா விட மாட்டேன் என்று கோவில்பட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார். கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவரை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் கிருஷ்ணன்கோயில் திடலில் நேற்று நடந்தது. வேட்பாளரை அறிமுகப்படுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கோவில்பட்டி பகுதியில் பிரதான தொழிலான தீப்பெட்டி தொழிலை வளம் பெற செய்வோம். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் கருணாநிதிக்குதான் ஓட்டு போடுவோம், அவர்தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா காப்பியடித்து வெளியிட்டுள்ளார். வேட்பாளர் ராமச்சந்திரன் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், இத்தொகுதியில் 7 அல்லது 9 பேர் அடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்த குழுவின் முடிவின்படி வேட்பாளர் ராமச்சந்திரன் செயல்படுவார். தேர்தல் வெற்றிக்கு பிறகு எங்கள் எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு பணியாற்றவில்லை என்றால் நான் சும்மா விட மாட்டேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment