Sunday, March 27, 2011

தேர்தலுக்கு பின் கூட்டணிகள் மாறும்: மதுரையில் சுப்பிரமணியசாமி பேச்சு


மதுரை: ""தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்ததும், இப்போது இருக்கும் கூட்டணிகள் மாறிவிடும்'', என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.


மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சசிகுமாரை ஆதரித்து அவர் பேசியதாவது: இந்த தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும். யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்ற கவலை ஜனதா கட்சிக்கு இல்லை. ஆனால் எங்கள் கட்சி சார்பில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆட்சியில் இருப்பவர்களால் ஊழல் செய்ய முடியாது. நான் டில்லியில் இருந்ததால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர்ந்து ஒரு அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளை ஜெயிலுக்கு அனுப்பினேன். இன்னும் நிறைய பேர் ஜெயிலுக்கு போக உள்ளனர். இதில் சிதம்பரத்திற்கும் பணம் கிடைத்துள்ளது. அவரும் ஜெயிலுக்கு போவார். சட்டசபை தேர்தலுக்கு பின் ராமதாஸ், விஜயகாந்த், காங்., இவர்கள் எந்த அணியில் இருப்பார்கள் என தெரியாது. கூட்டணிகள் மாறும்.


ஜெயலலிதா என்ன பேசினாலும், சசிகலா நினைப்பது தான் நடக்கும். ஜெயலலிதாவும் அதை கேட்டும் நிலை தான் உள்ளது. கறுப்பு பணத்தால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் என்கிறார்கள். அப்படி இருந்தால் ஏன் இப்படி விலைவாசி உயர்ந்துள்ளது. ஊழல்களால் மக்கள் பாதிக்கப்படுவீர்கள். மிக்சி, கிரைண்டர், லேப்-டாப் தந்தால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாது. வரும் தேர்தலில் இரண்டு அணிகளையும் தோற்கடிக்க வேண்டும். ஜனதா, பா.ஜ., கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில இடங்களில் வெற்றி பெற்றால் எங்களால் ஊழலை தடுக்க முடிவதுடன், மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும், என்றார்.

No comments:

print