Monday, March 28, 2011

மனைவி- சொத்து காரணமாக சில வேட்பாளருக்கு சிக்கல் வந்தது

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு இன்று பரிசீலனை நடந்தது. இதில் பெருவாரியான சுயேச்சை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சிற்சில புகார்கள் மற்றும் ஆவண விடுப்பு ஏற்பட்டாலும் கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டு முக்கிய கட்சிகள் மனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ம் தேதி துவங்கியது. மொத்தம் 4 ஆயிரத்து 289 மனுக்கள் தாக்கலாகின. கடைசி நாளான 26ம் தேதி மட்டும் ஆயிரத்து 879 மனுக்கள் பதிவாகின. இதில் திருப்பூர் ஒரு தொகுதியில் மட்டும் 152 பேர் போட்டியிடுவதாக மனுத்தாக்கல் செய்தனர். இவர்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
வேட்பு மனு இன்று அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் பரிசீலனை நடந்தது. தமிழகத்தில் போட்டியிடும் அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., , தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அமைச்சர்கள் மனுக்கள் ஏற்கபட்டு விட்டன. அதே நேரத்தில் காங்., தலைவர் தங்கபாலு மனøவி ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது.
திருவாரூரில் 12 பேர் போட்டி: முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் மொத்தம் 18 மனுக்ள் தாக்கல் ஆனது. இதில் 6 மனுக்கள் தள்ளுபடியானது. முதல்வர் கருணாநிதி உள்பட மொத்தம் 12 பேர் களத்தில் உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் 21 பேர் போட்டி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., மனு ஏற்கப்பட்டது. இந்த ‌தொகுதியில் மொத்தம் 23 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்ள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் மொத்தம் 41 மனுக்கள் பதிவாகின. 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 29 பேர்களத்தில் உள்ளனர். மதுரை மேற்கு தொகுதியில் மொத்தம் 13 மனுக்கள் தாக்கலானது . இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 3 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் சுயேச்சை உள்பட 9 பேர் களத்தில் உள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில் மொத்தம் தாக்கலான 12 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 188 மனுக்கள் தாக்கலானது. இந்த மனுக்களில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வேல்துரை மீது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நான்குனேரி தொகுதியில் போட்டியிடும் யாதவமகா சபை தலைவர் தேவநாதன் மனுவும் தள்ளுபடியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கியுள்ள வேட்பாளர்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 109 பேர் போட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகளில் இதுவரை 138 மனுக்கள் பதிவாகின. இதில் 25 மனுக்கள் தள்ளுபடியானது. 4 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 109 மனுக்கள் ஏற்ககப்பட்டன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரனுக்கு சிக்கல்: 4 முறை வேட்பாளராக இருந்தவரும், தற்போதைய எம்.எல்.ஏ., வுமான ஞானசேகரன் காங்., சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இத் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த வாலாஜா அசேன் மனு தாக்கல் செய்திருந்தார். ஞானசேகரன் மனு தாக்கலின் போது கொடுத்த சொத்து கணக்கில் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை என கடிதம் வாலாஜா உசேன் , கொடுத்தார். திருமுல்லைவாயிலில் அவர் பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கிய நிலம் பற்றிய தகவலை மறைத்துள்ளதாகவும், நிலம் வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் ஒப்படைத்தார்.
அவற்றைப் பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி கீதா, ஞானசேகரன் 3 மணிக்குள் சொத்துக்கள் குறித்த முறையான ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஞானசேகரனின் ஆவணங்கள் தள்ளுபடியாகக்கூடிய சூழல் நிலவியது. ஆனால் உரிய ஆவணங்கள் ஒப்படைத்த பின்னர் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .
அமைச்சர் நேருவுக்கு நெருக்கடி: திருச்சியில் போட்டியிடும் அமைச்சர் நேருவுக்கு வக்கீல் மலர்விழி என்பவர் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். இதில் உரிய ஆதாரம் இல்லாததால் மனு ஏற்கபட்டது.
அவினாசியில் .அ.தி.மு.க., வேட்பாளருக்கு சிக்கல்: திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரது மனுவில் தனது மனைவி விவரம் தொடர்பாக பொய் கூறியிருக்கிறார் என அ.தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மனு மீதான விசாரணையில் இழுபறி நீடிக்கிறது.
சேலம் மாவட்டம் கெங்கைவல்லியில் மொத்தம் பதிவான 14 ல் 4 தள்ளுபடி செய்யப்பட்டது. ஆத்தூர் தொகுதியில் 16 ல் 3 தள்ளுபடி செய்யப்பட்டன.

No comments:

print