Monday, March 28, 2011

அமராவதி ஆற்றில் புதிய பாலம் : கரூரில் ஜெயலலிதா வாக்குறுதி

கரூர்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மதியம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள்  கரூர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி செந்தில்நாதன், கிருஷ்ணராயபுரம் (தனி) எஸ்.காமராஜ் ஆகியோருக்கு வாக்கு கேட்டு பேசினார். அவர் பேசியதாவது: கடும் மின் வெட்டால்  விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கமுடியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். பசுபதிபாளையம் பழைய அமராவதி பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்படும். மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

நாளை திருவாரூர் கடந்த 24ம் தேதி முதல் திருச்சியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வரும் ஜெயலலிதா,  திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தை முடித்துள்ளார். இன்று மதியம் அவர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம்  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை செல்கிறார். அங்கு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு குடந்தை  ஆடவர் கல்லூரியில் வந்து இறங்குகிறார். பின்னர் குடந்தை காந்தி பார்க்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் தஞ்சை வந்து திலகர் திடலில் நடைபெறும்  கூட்டத்தில் பேசுகிறார்.  இரவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் தங்கும் ஜெயலலிதா நாளை பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார். அங்கு தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார். பின்னர் கடலூர் மாவட்டம் செல்கிறார்.

No comments:

print