Sunday, March 27, 2011

அதிமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை : ஜெயலலிதா!

திருச்சி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா கூறினார். அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா திருச்சியில் நேற்று 2வது நாளாக பிரசாரம் செய்தார். கருமண்டபத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் புங்கனூர், ராம்ஜிநகர், நவலூர்குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, அம் மாப்பேட்டை, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மரவனூர், மணப்பாறை  உள்பட பல இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்கான அசாதாரண தேர்தல். கடந்த 5 ஆண்டுகளாக விலைவாசிக் கட்டுக்குள் இல்லை. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர் கெட்டு விட்டது. இதையெல்லாம் போக்கிட, நல்லாட்சி நடைபெற உங்கள் அன்பு சகோதரியாக போட்டியிடும் எனக்கு வாக்களியுங்கள். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். பேருந்து இல்லாத பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மணப்பாறை பகுதியில் அரசு கல்லூரி அமைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை போக்கவும், காய், கனிகள் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இன்று மாலையும் அவர் திருச்சி பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

No comments:

print