Sunday, March 27, 2011

தே.மு.தி.க.,வுக்கு, "முரசு' சின்னம் : ஐ.ஜே.கே., கூட்டணிக்கு, "மோதிரம்'

சென்னை : தே.மு.தி.க.,வுக்கு, "முரசு' சின்னமும், இந்திய ஜனநாயக கட்சிக்கு, "மோதிரம்' சின்னத்தையும் ஒதுக்கி, தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு அனைத்து தொகுதிகளிலும், "முரசு' சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும், அனைத்து தொகுதிகளுக்கும்,"முரசு' சின்னம் ஒதுக்கக் கோரி, கட்சியின் சார்பில், தேர்தல் கமிஷனில் முறையிடப்பட்டது. இதே போல், இந்திய ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி, தேர்தல் கமிஷனில் முறையிட்டன.
கட்சிகளின் இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், நேற்று ஒவ்வொரு கட்சிக்கும் பொதுவான சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. தே.மு.தி.க.,வுக்கு,"முரசு' சின்னமும், இந்திய ஜனநாயக கட்சிக்கு, "மோதிரம்' சின்னமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு,"மெழுகுவர்த்தி' சின்னமும் ஒதுக்கி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. புதுச்சேரியில், என்.ஆர்., காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு,"ஜக்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இந்திய சமூக ஜனநாயக கட்சிக்கு தொலைக்காட்சி சின்னமும், ஐக்கிய சிறுபான்மை முன்னணிக்கு மணிபர்ஸ், அம்பேத்கர் மக்கள் இயக்கத்திற்கு மின்கம்பம், மக்கள் மாநாட்டு கட்சிக்கு டேபிள் லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு மாற்று அணியாக, இந்திய ஜனநாயக கட்சி(ஐ.ஜே.கே.,) தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில், ஜான்பாண்டியனை தலைவராக கொண்டு செயல்படும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமியை தலைவராக கொண்டு செயல்படும் சமூக சமத்துவ படை, தமிழ்நாடு வாணியர் செட்டியார் பேரவை, வ.உ.சி., பேரவை மற்றும் சில அமைப்புகள் இணைந்து போட்டியிடுகின்றன. இந்திய ஜனநாயக கட்சிக்கு, பொதுவான தேர்தல் சின்னம் ஒதுக்க வேண்டுமென, தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், அக்கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், மோதிரம் சின்னத்தில் ஐ.ஜே.கே., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

இது குறித்து, ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் பச்சமுத்து கூறியதாவது: தமிழக வரலாற்றில் அதிகமான தொகுதிகளில், ஒரு கட்சி தனித்து போட்டியிடுவது, ஐ.ஜே.கே., மட்டுமே. அந்த வகையில் எங்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக, நாங்கள் விரும்பி கேட்ட சின்னங்களுள் ஒன்றான மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இது, மக்கள் மனதில் எளிதில் பதியக் கூடியது. குழந்தைகள் முதல் முதியோர் வரை, மோதிரம் அணிவது, தமிழக கலாசாரம். அந்த வகையில் எங்கள் கட்சி, இந்த பொது சின்னமான மோதிரத்தை பெற்றதற்கு, எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறது. எங்களுடன் இணைந்து போட்டியிடும் தோழமை கட்சிகளான, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்(16), சமூக சமத்துவ படை(7), அகில இந்திய கைவினைஞர்கள்(9),

தமிழக வாணிய பேரவை(9), அழகு முத்துகோன் பேரவை(6), தமிழக அனைத்து பிள்ளைமார் மகாசபை(4), வ.உ.சி., பேரவை(2), அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு(1) மற்றும் எங்கள் கட்சியும் 180 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் தோழமை கட்சிகளும், மோதிரம் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. இவ்வாறு பச்சமுத்து கூறினார்.

No comments:

print