Monday, March 28, 2011

அதிமுக கூட்டணி தேர்தலில் வெல்லும்-144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு

டெல்லி: லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

No comments:

print