Thursday, March 31, 2011

தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா வக்கீலை நியமித்தது ஏன்-நோட்டீஸ்

சென்னை: தேர்தல் ஆணையத்தின் வக்கீலாக, ஜெயலலிதாவுக்காக ஆஜராகும் வக்கீலை நியமித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட்டி ஜெகன்னாதன் என்ற வக்கீல் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்,

தமிழகத்தில் மக்களிடம் சோதனை நடத்தி எமர்ஜென்சி காலகட்டம் போல் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. தேர்தல் கமிஷனின் எதேச்சதிகார போக்கால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

ஆதாரமற்ற தகவல்களை வைத்துக்கொண்டு வீடுகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறுகின்றனர். அவர்களின் நடவடிக்கை அனைத்தும் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு எதிரானதாகத் தெரிகிறது.

மேலும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சில வழக்குகளில் ஆஜராகும் வக்கீல் ஜி.ராஜகோபாலன், தேர்தல் கமிஷனின் வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தேர்தல் கமிஷன் வக்கீலாக அனுமதித்திருக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலன் ஆஜராகி வாதிடுகையில்,

என்மீது தனிப்பட்ட முறையில் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் வருமானவரித்துறை ஈடுபடுகிறது. ஆனால் இந்த துறைக்கு மனுதாரர் வக்கீலாக இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட மனுவை அவர் தாக்கல் செய்திருக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 5ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

No comments:

print