Saturday, March 26, 2011

வாக்காளர் அடையாள அட்டையில் குறை இருந்தாலும் அனுமதிக்கலாம் : தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் சிறிய குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை’ வழங்கப்பட்டுள்ளது. இப்படி வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் வாக்காளரின் பெயர், விலாசம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் சிறிய எழுத்து பிழைகள், தவறான விலாசம் போன்றவை இருக்கிறது. இதனால், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது என்று வாக்காளர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்குப் பதிவு நடக்கும் நாளில், தங்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை உடன் கொண்டு வர வேண்டும். வாக்காளர் எவரேனும் இந்த அடையாள அட்டையை வாக்குச் சாவடியில் சமர்ப்பிக்க தவறினால், அந்த வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் சிறிய குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இந்த தகவலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும், வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த தகவலை பத்திரிகைகளிலும் ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்கள், வாக்காளர்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதுதவிர, போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இந்த தகவலை எழுத்து மூலமாகவும் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

print