Sunday, March 27, 2011

தமிழக சட்டசபைத் தேர்தல்-4280 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 4280 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

234 தொகுதிகளிலும் மொத்தம் 4280 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சனிக்கிழமைதான், அதாவது கடைசி நாளான நேற்றுதான் அதிக அளவாக 1879 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் 152

தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூர் வடக்கு தொகுதியில் மொத்தம் 152 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 145 பேர் சுயேச்சைகள் ஆவர். இவர்கள் அனைவரும் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆவர். அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனுக்களை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் 387 பேர்

சென்னை மாநகரில் மொத்தம் 16 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட மொத்தம் 387 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் அனைத்தும் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 13ம் தேதி வாக்குப் பதிவும், மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

No comments:

print