தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்து வந்த தேர்தல் கமிஷன், தற்போது தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளது. தேர்தலில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பண வினியோகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில், இரு கட்டமாக தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் 28ம் தேதி ஒரு கட்டமாகவும், மே 6ம் தேதி மற்றொரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தி.மு.க., கூட்டணியிலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கூட்டணியிலும் தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.இன்னும், 10 நாட்களுக்குள் இரு அணிகளிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து, ஒவ்வொரு கட்சியும், போட்டியிடக்கூடிய தொகுதி எண்ணிக்கை விவரங்கள் தெளிவாக தெரிய வரும்.அதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகள் என்ற விவரங்களும் படிப்படியாக வெளிவர ஆரம்பிக்கும். இதற்கிடையே, தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, நாளையோ (2ம் தேதி) அல்லது 3ம் தேதியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் குறித்து, ஏற்கனவே பல கட்டங்களாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரும், ஆலோசனை நடத்தியுள்ளார்.அதில் பங்கேற்ற அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், "ஒரு தொகுதியில் இருப்பவர்கள், மற்றொரு தொகுதிக்குச் செல்வதை தடுக்கும் வகையிலும், பண வினியோகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்' என வலியுறுத்தின. தி.மு.க., பிரதிநிதிகள், "எதற்கும் நாங்கள் தயார்' என தெரிவித்தனர்.ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக, குரேஷியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுப்பதற்கு, அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன.
இதையடுத்து, தேர்தல் கமிஷன் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டதாக, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் முழுமையான அளவில் கண்காணிப்பை மேற்கொள்வது சிரமம் என்றும், அதனால் பண வினியோகத்தை முழுமையான அளவில் தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும், தேர்தல் கமிஷன் கருதுகிறது.இதனால், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தினால் கண்காணிப்பு பணிகளையும், பாதுகாப்பு பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்றும், பண வினியோகத்தை எளிதாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் தேர்தல் கமிஷன் நம்புவதாக கூறப்படுகிறது.எனவே, ஏப்ரல் 28ம் தேதி ஒரு கட்டமாகவும், மே 6ம் தேதி மற்றொரு கட்டமாகவும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment