Thursday, March 3, 2011

234தொகுதிகளிலும் பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு: தி.மு.க.,விற்கு சாதகமா?

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதற்காக, தொகுதிவாரியாக வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகிகளிடம் பெற்று வருகிறது. பா.ஜ.,வின் இந்த முடிவு, எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் என்பதால், ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

தேசிய அளவில் எதிர்க்கட்சியாகவும், பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்தும், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு உரிய முக்கியத்துவம் இதுவரை கிடைக்கவில்லை. பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., ஆகியவை முந்தைய காலங்களில், லோக்சபா தேர்தல்களில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து மத்திய ஆட்சியில் பங்கு பெற்றன.மத்தியில் பதவி பெற பா.ஜ.,வுடன் கூட்டு சேர தயங்காத திராவிட கட்சிகள், மாநிலத்தில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மறுத்து விலகி ஓடி வருகின்றன. அமைப்பு ரீதியாக தமிழக பா.ஜ., போதுமான பலம் பெற்றிருக்காததும், குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி இல்லாததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அத்துடன், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற அச்சமும், திராவிட கட்சிகள் விலகி ஓட காரணமாக இருந்து வருகிறது.

இந்த நிலையை உணர்ந்த தமிழக பா.ஜ., தனது ஓட்டு வங்கியை அதிகப்படுத்தும் முயற்சியில் கடந்த ஓராண்டாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ரத யாத்திரை, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என பெரும் கூட்டத்தை திரட்டி தொண்டர்களை தேர்தலுக்கு தயார் செய்து வருகிறது.தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்குவது குறித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் கடந்த ஆறு மாதங்களாக தொடர் ஆலோசனைகள் பா.ஜ.,வில் நடந்து வந்துள்ளன. திராவிட கட்சிகளோடு கூட்டணி அமையாத நிலையில், தனித்து போட்டியிட வேண்டிய கட்டாய நிலை பா.ஜ.,விற்கு ஏற்பட்டது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடாமல், கட்சிக்கு செல்வாக்கு உள்ள 100 தொகுதிகளை தேர்வு செய்து அதில் மட்டும் போட்டியிடலாம் என, நிர்வாகிகளில் ஒரு தரப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ., டில்லி தலைமையின் கவனத்திற்கு இந்த கருத்து எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அத்வானி இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இதையடுத்து, 100 தொகுதிகள் பட்டியல் எடுக்கப்பட்டு, அங்கு தேர்தல் பணியும் விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடாமல், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவேண்டுமென நிதின் கட்காரி உத்தரவிட்டுள்ளார்.
"வெற்றி, தோல்வி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

எல்லா தொகுதிகளிலும் கட்சித் தொண்டர்கள் பரவியுள்ள நிலையில், அவர்கøளை உற்சாகப்படுத்தி, தேர்தல் பணியாற்ற வைப்பதன் மூலம் அவர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும்' என்று, தனித்துப் போட்டிக்கு அவர் காரணம் கூறியதாக பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு தேவையான, "உதவி'களும் டில்லியில் இருந்து வரவுள்ளது.

இதன் அடிப்படையில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து, மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச். ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், வேட்பாளர் பட்டியலை பெற்று வருகின்றனர். ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும்; அதில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ரீதியில், மாவட்ட நிர்வாகிகளிடம் பட்டியல் பெறப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு, டில்லிக்கு அனுப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது.

முதல்வர் சந்திப்பு காரணமா?தமிழக பா.ஜ.,விற்கு கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் செல்வாக்கு உண்டு. சென்னை மயிலாப்பூர், தி.நகர் போன்று, மாநிலம் முழுவதும் 40 சட்டசபை தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுக்கள் வரை அக்கட்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் பா.ஜ., போட்டியிட்டிருந்தால், மற்ற தொகுதியில் உள்ள ஓட்டுக்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக சென்றடைந்து இருக்கும். ஆனால், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிடுவதால், தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்கள் பிரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பா.ஜ., மூத்த தலைவர் இல. கணேசனின் பிறந்தநாளின்போது, முதல்வர் கருணாநிதி அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னணியில், எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரியும் வண்ணம், அனைத்து தொகுதிகளிலும் போட்டி என்ற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பா.ஜ., நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயமாகும் தொகுதிகளில், பா.ஜ.,வின் நிலைப்பாடு தி.மு.க.,விற்கு வெற்றியை பெற்றுத்தரும் என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் முதலிடம்! கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தமிழக பா.ஜ., 225 தொகுதிகளில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளில் மட்டும் டிபாசிட் பெற்றது. மொத்தம் ஆறு லட்சத்து 66 ஆயிரத்து 823 ஓட்டுக்களைப் பெற்றது. மொத்த வாக்காளர்களில் அக்கட்சிக்கு 2.02 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில் சரத்குமார் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து 12 தொகுதிகளில் பா.ஜ., களமிறங்கியது. இதில், பொன். ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர், இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கணிசமான ஓட்டுக்களை பெற்றனர்.தென்சென்னை லோக்சபா தொகுதியில் இல. கணேசன் 42 ஆயிரத்து 925 ஓட்டுக்களையும், தமிழிசை சவுந்தரராஜன் வடசென்னையில் 23, 350 ஓட்டுக்களையும், கிருஷ்ணகிரி பாலகிருஷ்ணன் 20 ஆயிரத்து 486 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். நீலகிரியில் குருமூர்த்தி 18 ஆயிரத்து 690 ஓட்டுக்களையும், கோவை செல்வகுமார் 37 ஆயிரத்து 909 ஓட்டுக்களும், திருச்சி லலிதா குமாரமங்கலம் 30 ஆயிரத்து 329 ஓட்டுகளும் பெற்றனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 322 ஓட்டுக்களைப் பெற்றார். கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 474 ஓட்டுக்கள் பெற்று வெற்றியின் விளிம்பு வரை சென்றார். இந்த லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் பா.ஜ., முதல் இடத்தை பிடித்தது.இந்த தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் சட்டசபை தொகுதியில், பா.ஜ., 48 ஆயிரத்து 965 ஓட்டுக்களைப் பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி 13 ஆயிரத்து 232 ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. அதே போல், கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில், 52 ஆயிரத்து 192 ஓட்டுக்களை பெற்று முதலிடம் பெற்றது. இங்கு மார்க்சிஸ்ட் வெறும் 20 ஆயிரத்து 745 ஓட்டுக்களை மட்டுமே பெற முடிந்தது.

No comments:

print