Friday, March 18, 2011

அ.தி.மு.க, வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வருமா? 3 வது அணி உருவாகாமல் தடுக்க முயற்சி

சென்னை: அ.தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வரும் பட்சத்தில் அதிருப்தியின் காரணமாக டென்ஷனில் இருக்கும் கட்சிகள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 3 வது அணி உருவாகாமல் தடுக்க முடியும் என்றும் சென்னை அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.

பொதுவாக 3 வது அணி உருவாக இடதுசாரி கட்சியினர் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய இ.கம்யூ., மாநில செயலர் தா. பாண்டியன் கூறுகையில்: அ.தி.மு.க., ‌அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக அ.தி.மு.க., ‌தலைமை பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் பேசப்படவில்லை. என்றார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும், நேற்று இரவு வரை, தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். மூன்றாவது அணி அமைத்தால், அது, தி.மு.க., வெற்றி பெற வழிவகுக்கும் என்பதால், அந்த முடிவை எடுக்க, தலைவர்கள் அனைவருமே தயங்கினர். இதற்கிடையே, அ.தி.மு.க., தரப்பில் இருந்தும், கூட்டணி கட்சித் தலைவர்களிடம், பேச்சு வார்த்தை துவங்கியது.

தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கேட்கும் தொகுதிகளை தருவதற்கு, அ.தி.மு.க., இறங்கி வந்தது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும், பேச்சு வார்த்தை துவங்கியது. ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்தது. புதிய தமிழகம் கேட்ட, ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தரவும், அ.தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகளை ஒதுக்கவும், சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெற்றி பெற்ற தொகுதிகளை தருவதற்கும், அ.தி.மு.க., இறங்கி வந்தது. தே.மு.தி.க.,வுக்கு அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளை ஒதுக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., நேற்று இறங்கி வந்து, பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக சூழ்நிலையை உருவாக்கியதை அடுத்து, மூன்றாவது அணி முயற்சி நேற்றிரவு முடிவுக்கு வந்தது. இன்று, ஜெயலலிதா முன்னிலையில், கூட்டணி கட்சிகளுக்கு, அவர்கள் விரும்பியபடி, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

print