Saturday, March 5, 2011

தேர்தல் தேதி :அனைத்து கட்சி கூட்டத்தில் வருத்தம்

சென்னை:முன் கூட்டியே தேர்தல் அறிவித்ததற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று மாலை கூட்டினார். இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ்- பா.ம.க.,- பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தேர்தல் விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து, வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. சட்டசபை தேர்தலை எப்படி நடத்தப் போகிறோம் என்பது பற்றி அதிகாரிகள் நீண்ட விளக்கம் அளித்தனர். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும், பின்பற்ற வேண்டிய நன்னடத்தை விதிகள் என்னென்ன என்பது பற்றிய விளக்க குறிப்புகள் அரசியல் கட்சியினருக்கு தரப்பட்டது.வருவாய் துறையினர், போலீஸ் மற்றும் மத்திய உளவுத் துறையினர் ஒவ்வொரு தொகுதியையும் கண்காணிப்பர் என்றும் பிரவீன் குமார் தெரிவித்தார். மேலும், தேர்தலில் தவறான நடத்தையில் ஈடுபடுவோர் மீது புகார் செய்ய, கட்டணமில்லா தொலைபேசி சேவை, "1965' அறிமுகப்படுத்ததப்படுவதாகவும் அறிவித்தார். கூட்டம் முடிந்த பின், கட்சியின் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:பொன்முடி ( தி.மு.க.,) : தேர்தல் அமைதியாக நடக்க தி.மு.க., அனைத்து உதவிகளையும் செய்யும் என, தேர்தல் கமிஷனுக்கு உறுதியளித்துள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என்றாலும், எந்த தேதியில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயாராக உள்ளோம். பிரசார நேரத்தை, கிராமப்புறம், நகர்ப்புறம் என பார்க்காமல், அனைத்து பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என, கேட்டோம். தமிழிசை சவுந்திரபாண்டியன் ( பா.ஜ.,) : தேர்வு தேதியும், தேர்தல் தேதியும் மோதுகிறது. எனவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்தன. தேர்தல் கமிஷன் இதை ஏற்க ஏனோ மறுக்கிறது. நேர்மையான வகையில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். குறிப்பாக, பணப் பட்டுவாடாவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம். பாலகிருஷ்ணன் ( மார்க்சிஸ்ட்) : ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். 10லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் சமயத்தில் தேர்தல் நடத்துவது, தேர்வில் மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே, மே 1ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க கோரினோம். பழனிச்சாமி ( இந்திய கம்யூ.,) : மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தினால், மாணவர்களுக்கு இடையூறு இருக்காது. பிரசாரத்தால் கவனம் சிதறாது என்றோம். ஏழைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை. அவற்றை புதிதாக வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம். பாலு ( பா.ம.க.,) : தேர்தல் பிரசார நேரத்தை இரவு 10 மணியோடு முடிக்காமல், 11 மணி வரை நீட்டிக்க கோரினோம். தேர்தல் தேதியை மாற்ற சாத்தியமில்லை என, தேர்தல் அதிகாரி கூறினார். எந்த தேதியில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க பா.ம.க., தயார். மகேந்திரவர்மன் (பகுஜன் சமாஜ்) : தேர்தல் காரணமாக, ஒலிபெருக்கியும், ஊர்வல கோஷங்களும் விண்ணைத் தொடும். மாணவர்களின் கவனம் திரும்பி, கல்வி பாதிக்கும். கல்லூரிகளில் மே 10ம் ‌தேதி வரை தேர்வுகள் நடக்கும். ஆனால், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் கல்லூரிகளை ஒரு மாதமாக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், மாணவர்களின் கவனம் சிதறும்.

No comments:

print