மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட நிறைவேறாத கோரிக்கைகள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் நடந்த தடியடி போன்றவற்றால் அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியடைந்துள்ளனர். தி.மு.க.,வின், "செல்லப்பிள்ளை'களாக கருதப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டு மற்றும் "தேர்தல் கால ஒத்துழைப்பு' இம்முறையும் அக்கட்சிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட, அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர் சங்கம், அரசு பணியாளர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர்.இதில், அரசு ஊழியர் சங்கமும் மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்தும், அரசு பணியாளர் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தும் இயங்கி வருகின்றன. யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களைச் சார்ந்து அரசு அலுவலர் ஒன்றியம் இயங்கி வருகிறது.ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமிழக ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்கம், பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் என பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் இயங்கி வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாகவே இருந்து வருகின்றனர். அதற்கேற்ப, ஆட்சியில் அமரும் போது, பல்வேறு சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டு, ஓட்டு வங்கியை தி.மு.க., தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, அரசு ஊழியர் போராட்டம் நடந்த போது, "எஸ்மா, டெஸ்மா' சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டன. அரசு ஊழியர்களின் வீடுகளில் போலீசார் புகுந்து அவர்களை கைது செய்த சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பங்களால் கொதித்துப் போன அரசு ஊழியர்கள் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக திரும்பினர்.தேர்தலில் தங்களது பங்களிப்பையாற்றி அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.தற்போதைய தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையே உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் படி, போனஸ் வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.ஆசிரியர் சங்க அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட களத்திற்கு வந்துள்ளனர்.
சாலை பணியாளர்கள் தங்களது பணி நீக்க காலத்திற்கு சம்பளம் வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். சத்துணவு ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற போது, அந்தந்த மாவட்டங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இதன் உச்சகட்டமாக, காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட அரசு ஊழியர்கள், பிப்ரவரி 25ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய @பாது போலீசார் தடியடி நடத்தினர். இதில் அரசு ஊழியர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் விரட்டி, விரட்டி தாக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் தி.மு.க., அரசின் மீது கொண்ட அபிமானம் குறைய இந்த சம்பவம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க., அணியில் இருப்பதால், அரசு ஊழியர் சங்கம் மற்றும் பணியாளர் சங்கங்கள் அந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயல்படும் வாய்ப்புள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்பாததால் கடுமையான வேலைப் பளு அரசு ஊழியர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. வருவாய்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆளுங்கட்சியினரின் தலையீடு, மிரட்டல் காரணமாகவும் தி.மு.க.,வின் மேல் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இது தொடர்பாக போராட்டங்களும் நடந்துள்ளன. இது போன்ற காரணங்களால், தி.மு.க.,வின் பிடியில் இருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியில், "ஓட்டை' விழுந்துள்ளது. கடந்த தேர்தலின் போது, அ.தி.மு.க., ஆட்சியை எதிர்த்து, "பகை முடிப்போம், பணி முடிப்போம்' என்று குரல் கொடுத்த அரசு ஊழியர்கள் தற்போது, " வஞ்சனைக்கு எதிராய் வெஞ்சினம் கொள்வோம்' என்று கிளம்பியுள்ளனர்.இவர்களின் கோபத்தால் ஆளுங்கட்சிக்கு சென்று சேர வேண்டிய நேரடி ஓட்டுக்கள் மற்றும் அவர்களது குடும்ப ஓட்டுக்களும் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் கு. பாலசுப்பிரமணியன் :அரசு பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்ததில் குறைபாடுகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசுக்கு இணையான வீட்டு வாடகை, கல்வி படிகள் கிடைக்கவில்லை. மத்திய அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 3,050 ரூபாய் வழங்கப்படுகிறது.ஓய்வூதியம் பெறுவோரின் வயது அதிகரிக்க, அதிகரிக்க பென்ஷனை அதிகரித்து மத்திய அரசு வழங்கிறது; ஆனால், தமிழகத்தில் இந்த நிலை இல்லை. பல்வேறு துறைகளில் இரண்டு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளனர். அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; அடிப்படை பணிகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவு எழுத்தர் ஆகியோருக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை.டாஸ்மாக் பணியாளர்கள், ரேஷன்கடை, நீச்சல்குள பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கிடைக்கவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி எழுத்தர், கிராம பணியாளர்கள், பட்டு வளர்ச்சி, மக்கள் நல பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை.ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் தொடர்கிறது; நிரந்தர பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசு அலுவலர்களின் பணிப்பளுவுக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை அரசு உருவாக்கவில்லை. கல்லூரி கவுரவ ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தனர். அவர்கள் நிரந்தரப்படுத்தப்படவில்லை.அரசு பணியாளர்கள் போராட்டங்கள் பல நடத்தியும், குறைகளை தீர்க்க அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அரசு அலுவலர்களுக்கு சம்பள மாற்றத்தின்போதும், ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் அமலான போதும் சங்கங்களை அழைத்து அரசு பேசவில்லை. ஒரு சங்கத்தினர் போராட்டம் நடத்தியபோது, தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.
அரசு பணியாளர்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே பணியாற்றுபவர்கள்; அரசின் சட்டத்தின்படி செயல்படுபவர்கள். நிர்வாகத்தில் அரசாணைகள் தான் முன்னிலைப்படுத்த வேண்டும். ஆனால், அரசு பணியாளர்களின் இடமாறுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் மேலிட சிபாரிசின் பேரிலேயே நடந்து வருகிறது.பணியாளர்கள் தேவையை வேலைவாய்ப்பகம், டி.என்.பி.எஸ்.சி., மூலம்தான் நிரப்ப வேண்டும். ஆனால், பொது சுகாதாரத்துறையில் ஏஜன்சிகள் மூலம் ஆள் எடுப்பு நடக்கிறது. ஒப்பந்தம், தினக்கூலி என பல விதங்களில் பணியாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதுவும், ஆளுங்கட்சியின் சிபாரிசு இருந்தால்தான் பணியில் சேர முடிகிறது. வேலையில் சேரும்போது, சிபாரிசோடு வந்தால், அவர் எப்படி சரியாக செயல்படுவார்?நான் சொல்பவருக்கு வேலை கொடு என்று அரசியல்வாதிகள் தங்கள் அடிமைகளாக பணியாளர்களை வைத்துள்ளனர். அரசு நிர்வாகத்தில் நியாயமாக நடந்தால், சிக்கல் வந்துவிடும் என்ற பயம் வந்துவிட்டது. அதனால், ஆளுங்கட்சியோடு ஒத்துப்போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், அரசு பணியாளர்கள் அதிருப்திக்குள்ளாகி இருக்கின்றனர்.
அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் சீனிவாசன் பேட்டி:கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் எங்களது சங்கத்தின் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பங்கேற்று பேசும்போது, " அரசுத்துறையில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 714 பணியிடம் காலியாக உள்ளது. அவர்றை அரசு படிப்படியாக பூர்த்தி செய்யும்' என்று அறிவித்தார்.ஆனால், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசு அக்கறை காட்டவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரு அறிவிப்பின்போதும், 12 லட்சம் அரசு ஊழியர்கள் என்று அரசு சொல்லி வருகிறது. ஆனால், தணிக்கைத்துறை கணக்கு படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்த பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதாக சொல்கின்றனர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட சத்துணவு, அங்கன்வாடி, மக்கள் நல பணியாளர்கள், தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய ஆசியர்களுக்கு காலவரை ஊதியம் நிர்ணயித்துவிட்டு, அவர்களை புதிதாக பணி நியமனம் செய்தது போல் கணக்கு காட்டி வருகின்றனர்.
வேலைவாய்ப்பகங்களில் 70 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், மொத்தமுள்ள 146 அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, "குரூப் - 4' ஊழியர்களைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டிய 90 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அரசு ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய டி.என்.பி.எஸ்.சி.,யில் மொத்தமுள்ள 600 பணியிடங்களில் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மொத்தமுள்ள 1,340 பணியிடங்களில் 600 பணியிடம் காலியாக உள்ளது. இந்த லட்சனத்தில் விளம்பரத்திற்காக அரசு வேலைவாய்ப்பு மேளா நடத்தி வேடிக்கை காட்டி வருகிறது.
காலிப்பணியிடங்களால், அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் தலையீடு அதிகரித்துள்ளது.சாத்தூர், ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் அரசியல் தலையீடு காரணாக தாக்கப்பட்டார். விருதுநகர் ஆளுங்கட்சி பிரமுரிடம் குடிநீர் கட்டணம் கட்டுமாறு கூறிய ஊழியர் தாக்கப்பட்டார். இது போன்ற பல சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளது.அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த ஒரு நபர் குழு குறைகளை தீர்ப்பதற்கு பதிலாக பல புதிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களோடு ஒப்பிடுகையில், வீட்டுவாடகை, கல்வி, போக்குவரத்து படிகளில், 2,595 ரூபாய் குறைந்தபட்ச வேறுபாடு உள்ளது. கண்காணிப்பாளர் நிலையில் 7,000 ரூபாய் குறைகிறது.ஆனால், அமைச்சர், உயர்அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்கள் பரிந்துரை மூலம் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணிச்சுமை, அரசில் தலையீடு, அரசியல்வாதிகளால் தாக்குதல் போன்ற காரணங்களால் அரசு ஊழியர்கள் மத்தியில், அரசின் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இந்த குறைகளை முதல்வரிடம் முறையிடச் சென்ற எங்கள் சங்க நிர்வாகிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. தற்போதைய முதல்வர் எதிர்கட்சியாக இருக்கும்போது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்தால் கண்டித்தார். இப்போது அந்த தவறை அவரே செய்கிறார்.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் ஐந்து ஆண்டு காலத்தில், இதுவரை சங்கங்களை சந்தித்து பேசவே இல்லை. தங்களுக்கு, "ஜால்ரா' போடுபவர்களை மட்டும் அருகில் நெருங்க விடுவது ஆளுங்கட்சியின் செயல்பாடாக உள்ளது.
கடந்த ஆண்டு சத்துணவு ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்த சென்னைக்கு வர திட்டமிட்டிருந்தபோது, அவர்கள் வரும் வழியில் மடக்கி கைது செய்யப்பட்டனர். பலரை வீடுகளுக்குள் புகுந்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களை பார்ந்து நொந்து போயுள்ள அரசு ஊழியர்கள் அ.தி.மு.க., அரசே பரவாயில்லை என்று நினைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.இந்த உணர்வுகள் வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும். தபால் ஓட்டுக்களை முழுமையாக பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு அனுமதி கிடைத்தால் நிச்சயம் ஆளுங்கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்.
அண்ணாமலை - தென் மாநிலச் செயலர், அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு:தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தொகுப்பூதிய ஆசிரியர் நியமனம் இருக்க கூடாது என்றோம். 42,500 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 52 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். கல்வித்துறை அலுவலக பணியாளர்களைப் பொறுத்தவரை போதிய பணியிடங்கள் இல்லை. ஓய்வு பெற்றவர்கள் பணியிடம் நிரப்பபடாததால் வேலைப் பளு அதிகரித்துள்ளது.மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை, தமிழக ஆசிரியர்களுக்கு தருவோம் என முதல்வர் உறுதி அளித்தார். 21 ஆண்டு காலமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைத்து வந்த, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரையின் போது வழங்கப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், வருத்தமும் நீடிக்கிறது. புதிய ஆட்சி வரும் போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் என்ற எங்கள் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான உத்தரவு வரவில்லை. மத்திய அரசு வழங்கும் வீட்டு வாடகைப்படி தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை.நான்கரை ஆண்டு ஆட்சியில், ஆறு மாத காலமாக அனைத்து ஆசிரியர் சங்கங்களும் வீதியில் நின்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சில கோரிக்கைகளுக்கு மட்டும் தீர்வு கிடைத்துள்ளன. ஆசிரியர் பணி நியமனம் வெளிப்படையாக நடந்தது. பணி மாறுதலில் தவறுகள் நடக்கிறது. சிபாரிசுகள் மூலம் பணி மாறுதல் எல்லா ஆட்சியிலும் நடக்கும். இந்த ஆட்சியிலும் நடந்துள்ளது.
"ஒத்துழைப்பு' கிடைக்குமா? சட்டசபை தேர்தல் பணியில் இரண்டு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். கடந்த தேர்தலின்போது பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் தி.மு.க.,வினருக்கு, "ஒத்துழைப்பு' கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தற்போது அரசு ஊழியர்கள் தி.மு.க.,வின் மீது அதிருப்தி கொண்டுள்ள நிலையில், வரவுள்ள சட்டசபை தேர்தலில் இத்தகைய, "ஒத்துழைப்பு' கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குறைகள் என்ன?
* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் கிடைக்கவில்லை.
* அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கவில்லை
* அரசு அலுவலர்களின் பணிப்பளுவுக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை அரசு
உருவாக்கவில்லை.
* 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முயற்சி எடுக்கவில்லை
* கோரிக்கைகள் குறித்து சங்கங்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை.
* கடந்த மாதம் 25ம் தேதி அரசு அலுவலர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தால் அதிருப்தி
No comments:
Post a Comment