Monday, March 14, 2011

வரும் 16 ம் தேதி தி.மு.க., வேட்பாளர் பட்டியல் ; திருவாரூரில் கருணாநிதி போட்டியிட வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் வரும் 19 ம் தேதி துவங்குகிறது. தமிழக தேர்தலை பொறுத்த மட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி அடிப்படையில் இருமுனை போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை தி.மு.க., ஒரளவுக்கு முடித்து விட்டதாகவே தெரிகிறது.

ம.தி.மு.க., நிலை என்ன ? அதே நேரத்தில் அ.தி.மு.க, கூட்டணியில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்குவது முடிவாகவில்லை. பேச்சு வார்த்தைக்கு ஜெ., அழைப்பார் என்ற எதிர்பார்ப்பில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்திய கம்யூ. கட்சிக்கு இன்று 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியி்ன் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார். மார்க்.,கம்யூ.. கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., (63 தொகுதிகளில் போட்டி) , பா.ம.க., (30 தொகுதிகளில் போட்டி) , விடுதலை சிறுத்தைகள் (10 தொகுதிகளில் போட்டி) , கொங்குநாடு முன்னேற்ற கழகம் (7 தொகுதிகளில் போட்டி) , இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (2 தொகுதிகளில் போட்டி) , பெருந்தலைவர் மக்கள் கட்சி (1 தொகுதிகளில் போட்டி) , மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1 தொகுதிகளில் போட்டி) என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது எந்த சின்னத்தில் போட்டியிடுவது என ஏறக்குறைய முடிவாகி விட்டது. இருந்தாலும் ஒரு சில தொகுதிகள் எனக்கு வேண்டும். உனக்கு வேண்டும் என்ற பிரச்னையால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள்: சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. தி.மு.க., கூட்டணியில் ராயபுரம், திருவிக, நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், டி.நகர் என 5 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. வேளச்சேரியில் பா.ம.க.,வும் போட்டியிடும்

கருணாநிதி தொகுதி மாறுகிறார்: தமிழகத்தில் பல முறை எம்.எல்.ஏ., வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்து வரும் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் பணிகளை துவக்க கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.

தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும் ? தொகுதி வாரியாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 16ம் தேதியன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட உள்ளதாக திமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ம் தேதியன்று கருணாநிதி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டமும் தொடர்ந்து 19ம் தேதியன்று திமுக வின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.

இதில் மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி என்ற அறிவிப்பு மக்கள் இடை‌யே பரவலாக பேசப்பட்டு வரவேற்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

print