Tuesday, March 15, 2011

திருவாரூரில் 23ல் முதல்வர் பிரசாரம் : அனுமதி கேட்டு கலெக்டருக்கு கடிதம்

திருவாரூர் : சட்டசபை தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி வரும் 23ம் தேதி திருவாரூரில் துவக்குகிறார். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடக்கோரி 2,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதனால் திருவாரூர் தொகுதி நிலவரம் குறித்து உளவுப்பிரிவு மற்றும் தனியார் சர்வே நிறுவனங்கள் ஆய்வு செய்து தலைமைக்கு அனுப்பி வைத்தது.

அதன் பேரில், முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 23ம் தேதி திருவாரூர் மன்னார்குடியில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்கும் முதல்வர் அன்று இரவு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

முன்னதாக திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் முதல்வரின் தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக சென்னை தி.மு.க., தலைமையகம் மற்றும் மாவட்ட செயலாளர் மூலம் 23ம் தேதி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கேட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளனர்.

மறுநாள் 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திருவாரூரில் தங்கி தொகுதிக்குட்பட்ட அனைத்து பஞ்சாயத்து தலைவர்களையும் நேரில் சந்திக்க கட்சி மேலிடம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான பணியினை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அதனால் கருணாநிதி திருவாரூர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments:

print