கோவை:""சட்டசபை தேர்தலில் சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
கோவையில் பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலில் சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சியுடன் இணைந்து, 234 தொகுதியிலும் பா.ஜ., கட்சி போட்டியிடும். 100 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) காலை வெளியாகும். மார்ச் 16ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர் பெயர்களும் அறிவிக்கப்படும்.
தேர்தலில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். வரும் 12ல் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தி.மு.க., - காங்., கூட்டணி ஒரு கசப்பு உணர்வுள்ள கூட்டணி. ஆறு ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்திய பா.ஜ., கட்சி, தோழமை கட்சிகளை மரியாதையாகவே நடத்தி வருகிறது. ஆனால், இன்று காங்., கட்சி தி.மு.க., கட்சியை அவமானப்படுத்துகிறது.காங்., தேச விரோத ஆட்சி நடத்துகிறது. விரைவில் இதற்கு முடிவு கிடைத்து விடும். வரும் மே மாதத்துக்கு பின் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்காது. மத்திய அரசின் முடிவு நெருங்கி விட்டது.
தற்போது கைதாகியுள்ள ஹசன் அலி 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து வருமானவரித் துறையினரும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு ராஜா கூறினார்.
No comments:
Post a Comment