தென்காசி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தென்காசி, குற்றாலம் போலீஸ் நிலையங்களில் சரத்குமார் உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி தொகுதி சமக வேட்பாளராக அக் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் போட்டியிடுகிறார். இதனையடுத்து தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக நேற்று அவர் தென்காசிக்கு வந்தார். 10 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம், மைக் போன்றவற்றிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தென்காசி நகர எல்லையான கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலை, மலையம் தெரு தேவர் சிலை, தென்காசி காந்தி சிலை, நன்னகரம் அம்பேத்கர் சிலை, குற்றாலம் அண்ணா சிலை ஆகியவற்றுக்கு சரத்குமார் நேரடியாக மாலை அணிவிக்காமல், மாலைகளை தொட்டு கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். அவர்கள், தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சிகள் இரவு 11.30 மணி வரை நடந்தன. இதனால் காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் இரவு கூட்டம் முடிந்ததும் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக சமக தலைவர் சரத்குமார் உள்பட 100 பேர் மீது தென்காசி போலீசிலும், குற்றாலத்தில் இதே போன்று சரத்குமார் உள்பட 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment