Wednesday, March 23, 2011

வேட்பாளர் பட்டியல் ரெடி: தமிழக காங்கிரசில் பரபரப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி விட்டதாகவும், சோனியா ஒப்புதலுடன் இன்று மாலையில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் சீனியர் தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியிருப்பதால் தமிழக காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிட்டிங் எம்எல்ஏக்களாக 35 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருமே இப்போது தங்கள் வசம் இருக்கும் தொகுதியையே மீண்டும் ஒதுக்க கோரி வருகின்றனர்.  சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, இளங்கோவன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு வருகின்றனர். இளைஞர் காங்கிரஸ் தரப்பிலும் பிரதிநிதித்துவம் கேட்கப்படுகிறது.

ஒரு தொகுதிக்கு 3 பேரை பரிந்துரைத்து அதில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கும்விதமாக, பட்டியல் தயார் செய்து அதை டெல்லிக்கு தங்கபாலு எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், வயலார் ரவி, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோருடன் தங்கபாலு ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் தமிழக காங்கிரசில் உள்ள முக்கியத் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு அதற்கான சிபாரிசு கடிதத்தை கொடுத்திருந்தனர். எல்லா தரப்பு கோரிக்கைகளையும் மனதிற்கொண்டு தயாரான பட்டியல் இன்று காலையில் சோனியா காந்தியிடம் அளிக்கப்பட்டது.

அதில் ஒரு சில தொகுதிகளுக்கான பெயர்களை சோனியா காந்தியே திருத்தியதாக கூறப்படுகிறது. அதன்பின் பட்டியலுக்கு அவர் இறுதி வடிவம் கொடுத்து, ஒப்புதல் கொடுத்தார். அதில் முக்கிய தலைவர்கள் ஒரு சிலர் மற்றும் 2 முறைக்கு மேல் எம்எல்ஏக்களாக இருந்தவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்ததால் காங்கிரசில் சில தலைவர்கள் கலக்கம் அடைந்தனர். மற்றபடி, வேட்பாளர் தேர்வு முடிந்து விட்டதாகவும், இன்று மாலையோ அல்லது நாளையோ வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மயிலாப்பூரில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி, திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன், தி.நகர் - சாய் லட்சுமி, ராயபுரம் - மனோ, செய்யாறு - விஷ்ணு பிரசாத், சோளிங்கர் - அருள் அன்பரசு, ஆலந்தூர் - காயத்ரி, ரிஷிவந்தியம் - சிவராஜ், வால்பாறை - கோவை தங்கம், தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சிங்காநல்லூர் - மகேஸ்வரி (அல்லது) எம்.என்.கந்தசாமி, காங்கேயம் - விடியல் சேகர், நாங்குநேரி - வசந்தகுமார், ராதாபுரம் - ராணி வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறின.

No comments:

print