Wednesday, March 2, 2011

இறங்கி வருகிறது காங்கிரஸ்: ஒரிரு நாளில் ஒப்பந்தம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் கட்சியினருக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமுறை 2006ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி தேர்தல் நடந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 26 நாட்களுக்கு முன்பே தேர்தல் வந்து விட்டது.

காங்கிரஸ், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகிய 2 கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன்பாட்டை உறுதி செய்ய வேண்டியதுள்ளது. காங்கிரஸ் கட்சி 90 தொகுதி, ஆட்சியில் பங்கு, குறைந்த பட்ச பொது செயல் திட்டம் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்தது. ஆனால் இதை ஏற்க தி.மு.க., மறுத்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 53 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. கடந்த தடவை 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த தடவை 80 தொகுதிகளுக்கு மேல் பெற்று விட வேண்டும் என்பதில் மிக, மிகத் தீவிரமாக உள்ளது.

இதன் காரணமாக இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தேர்தல் முன்னதாகவே வந்து விட்டதால் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வுடனான தொகுதி பங் கீட்டை விரைந்து உறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிவரை கேட்கலாம். தி.மு.க. சம்மதிக்காத பட்சத்தில் 60 தொகுதிகளை யாவது கேட்டுப் பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

தி.மு.க.வை பொருத்த வரை குறைந்த பட்சம் 135 முதல் 140 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாகவும் உள்ளது. சட்டசபையில் தனிப் பெரும்பான்மை பலம் பெற இந்த எண்ணிக்கை அளவில் போட்டியிட வேண்டியது அவசியம் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தி.மு.க. விளக்கியுள்ளது. எனவே தி.மு.க., ஒதுக்கீடு செய்யும் 53 தொகுதிகளை காங்கிரஸ் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.


தமிழக அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு சோனியா உள்பட காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் அனைவரும் தங்கள் பிடிவாதத்தில் இருந்தும், சற்று இறங்கிவந்துள்ளனர். இனியும் கூடுதல் தொகுதி கேட்டு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகளை முன் வைப்பது பலன் தராது என்பதை உணர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே விரைவில் சோனியா அல்லது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பேசி தொகுதி பங்கீடு உடன் பாட்டை சுமூகமாக்குவார்கள் என்று எதிர்பார்‌க்கப்படுகிறது.3 வது கட்ட பேச்சு வர்த்தைக்காக இன்று இரவு குலாம்நபி ஆசாத் சென்னை வருகிறார். 9 மணியளவில் தி.மு.க.,வுடன் குலாம் நபி ஆசாத் தி.மு.க.,வினருடன் பேச்சு நடத்துவார் என தெரிகிறது. இதனையடுத்து விரைவில் தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்யும் என்று தெரிகிறது.

No comments:

print