Monday, March 21, 2011

தேமுதிக அலுவலகத்தில் நின்ற வாகனங்களில் திடீர் சோதனை

சென்னை: தேமுதிகவின் தலைமை அலுவலகம் சென்னை கோயம்பேட்டில் உள்ளது. அங்கு இன்று காலை, மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைவர் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் வாகனங்கள் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. மதியம் 12.30 மணி அளவில் தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பறக்கும் படையினர், திடீரென தேமுதிக அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை திறந்து காண்பிக்கும்படி கூறி, சோதனையிட்டனர். வாகனங்களில் இருந்த சூட்கேஸையும் திறந்து பார்த்தனர். அவர்களுடன் வந்த துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வாகனங்களுக்குள் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஏதாவது பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து பறக்கும் படை அதிகாரி குமார் கூறுகையில், தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள முக்கிய கட்சி தலைமை அலுவலகங்களில் வாகனங்களில் சோதனை நடத்தி வருகிறோம். கட்சி அலுவலகத்துக்கு உள்ளே மற்றும் வெளியே வரும் வாகனங்களை நாங்கள் சோதனை செய்வோம். ஆனால் கட்சி அலுவலகத்துக்குள் சென்று சோதனையிட மாட்டோம். சோதனையில் இதுவரை எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையில் 2 எஸ்ஐ, 4 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர் என்றார்.

No comments:

print