Sunday, March 13, 2011

சேது சமுத்திர திட்ட ஆய்வு பணி முடிந்ததாம்: கருவிகள் கரை திரும்பின

ராமநாதபுரம்: சேது சமுத்திர திட்ட மாற்றுப்பாதை ஆய்வுப் பணிகள் திடீரென முடிந்து விட்டதாகக் கூறி, அதற்கான கருவிகளை கரை சேர்த்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.



தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்த போது, சேது சமுத்திர திட்டம் துவங்கப்பட்டது. ராமர் பாலம் சர்ச்சையை தொடர்ந்து, திட்டம், சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது. 600 கோடி ரூபாய்க்கு மேல் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாமதத்தால் அதற்கான பணிகள் வீணானது. யார் மனதையும் புண்படுத்தாத வகையில் மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்றும் காரணிகளை கண்டறியுமாறு, மத்திய அரசுக்கு கோர்ட் வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, பச்சோரி என்பவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, மாற்றுப் பாதை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஆய்வுப் பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. மாற்றுப்பாதை ஆய்வு அறிக்கை குறித்து மத்திய அரசிடம் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதைக் கண்டித்த கோர்ட், குறிப்பிட்ட காலத்தில் மாற்றுப்பாதை பணிகளை நிறைவு செய்து, அறிக்கையை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியது. அதன் பின், மன்னார் வளைகுடா பகுதியில் மிதவை கருவிகள் பொருத்தப்பட்டு, கடலின் நீர் ஓட்டம், மண் அரிப்பு, தட்பவெப்பம், காற்றின் வேகம் போன்றவை கணக்கிடும் பணி நடந்தது. இயற்கை சீற்றத்தால், மாற்றுப் பாதை ஆய்வுப் பணியும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், சேது சமுத்திர திட்டப்பணிகளில் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று, சேது சமுத்திர மாற்றுப்பாதை ஆய்வுப்பணிகள் நிறைவு பெற்றதாகக் கூறி, அதற்கான கருவிகள் படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டன. பணிகள் தொடர்ச்சியாக முழுமை பெறாத நிலையில், திடீரென பணிகள் முடிந்ததாகக் கூறியிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஆய்வுப்பணியின் தொழில்நுட்ப உதவியாளர் சிங் கூறியதாவது: பதினான்கு மாதமாக நடந்த ஆய்வுப்பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்கான அறிக்கைகள் முறையாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஆய்வுக் கருவிகள் மட்டும் நடுக்கடலில் உள்ளன. சேது சமுத்திர மாற்றுப் பாதை ஆய்வுப் பணி கருவிகள், கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு சிங் கூறினார்.

No comments:

print