Sunday, March 13, 2011

சீட்' கேட்கும் அப்பாவி தொண்டர்களுக்கு மோசடி கும்பல் வலைவீச்சு

""நமக்கு வேண்டிய கட்சிக்காரரு, "2சி' வரைக்கும் செலவு பண்ண தயாரா இருக்காரு... சரியான, "ரூட்' இருந்தா சொல்லுங்க!'' அறிவாலயத்தில் வெளிப்படையாகவும், போயஸ் தோட்டத்தில் மறைமுகமாகவும் நேர்காணலைச் சந்தித்து விட்ட கரைவேட்டிகள், "சீட்' பிடிக்க தோதான ஆள் பிடிக்கும் வேலையில் தீவிரமாய் இறங்கியுள்ளன.



தி.மு.க.,வில் 15 ஆயிரம் பேரும், அ.தி.மு.க.,வில் 12 ஆயிரம் பேர், தே.மு.தி.க.,வில் 7,500 பேர் என மூன்று கட்சிகளில் மட்டும் 34 ஆயிரத்து 500 பேர் மனு செய்துள்ளனர். இது தவிர, காங்கிரஸ் - பா.ம.க., - வி.சி., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில், "சீட்' பிடிக்க மோதுபவர்கள் கணக்கு தனி. இத்தனை பேரும் பங்கிட்டுக் கொள்ளப் போவது வெறும் 234 தொகுதிகளைத் தான்.

கட்சியில், "சீனியர்' ; பல போராட்டங்களில் பங்கேற்றவர் என பல தகுதிகள் இருந்தாலும், நேர்காணலில் பங்கேற்று விட்டு, ஊருக்கு போய், போர்வையை போர்த்தி தூங்கினால், "சீட்' கிடைத்துவிடாது என்பது உடன்பிறப்புகளுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால், அறிவாலயத்தின் அசைவுகளை நிர்ணயிப்பவர்களையும், போயஸ் தோட்டத்தில் செல்வாக்கு பெற்றவர்களையும் தேட ஆரம்பித் துள்ளனர்.

தி.மு.க., தலைமையைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், "சீட்' பெற முடியும் என்ற நம்பிக்கை, விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் மத்தியில் நிலவுகிறது. துணை முதல்வர் ஸ்டாலின் வீடு, முதல்வரின் கோபாலபுரம், சி.ஐ.டி., காலனி வீடுகளில் இரவு, அதிகாலை நேரங்களில் அதிக கூட்டம் தென்படுகிறது. மதுரை பிரமுகர்கள் அழகிரியிடம், "தலை'யைக் காட்டி பல பேர், "சீட்'டுக்கு அடிபோட்டு வருகின்றனர். முதல்வருக்கு நெருக்கமான வட்டாரம் என கருதப்படும் பேராசிரியர் நாகநாதன், கவிஞர்கள் வாலி, வைரமுத்து உள்ளிட்டவர்களின் பரிந்துரைக்காக தவம் கிடப்பவர்களும் அதிகம்.

தி.மு.க.,வில் மாவட்டச் செயலர் பரிந்துரை அவசியம் என்பதால், அவரை மடக்குவதில் பெரும் போட்டி நிலவுகிறது. மாவட்டச் செயலருக்கு பிடிக்காதவர்கள், எதிரணியில் உள்ளவர்கள் தலைமை நிலைய நிர்வாகிகள் மூலம், "சீட்' பிடிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் யாருக்கு, "சீட்' கிடைக்கும் என்பது, அந்த ஆண்டவனுக்கும், அம்மாவுக்கும் மட்டும் தான் தெரியும். ஒவ்வொரு தேர்தலின் போதும், "இவருக்கு சீட் எப்படி கிடைத்தது' எனத் தெரியாமல் கட்சித் தொண்டர்கள் குழம்புவது வாடிக்கை. அக்கட்சியில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் ஆதிக்கம் இந்த முறை குறைந்துள்ளது என்கின்றனர் அ.தி.மு.க., நிர்வாகிகள்.

இருப்பினும், (சசிகலா) நடராஜன், தினகரன், திவாகரன், மகாதேவன், வெங்கடேஷ் என மன்னார்குடி வகையறாக்களுக்கும், அவர்களால் நியமிக்கப்பட்ட ராவணன், கலியமூர்த்தி உள்ளிட்டவர்களுக்கும் மறுபடியும், "மவுசு' ஏற்பட்டுள்ளது. இவர்களை அணுகினால், "சீட்' நிச்சயம் என பலரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தே.மு.தி.க.,வில், "சீட்' பெறுவதற்கும் கடும் போட்டி நீடிக்கிறது. விருப்பமனு தாக்கல் செய்த கையோடு, தேர்தல் நிதியை, "வெயிட்'டாக கொடுத்து தொகுதியை உறுதி செய்ய பார்ப்பவர்களும் இருக்கின்றனர். தே.மு.தி.க., தலைவரின், "கிச்சன் காபினேட்' என்று அழைக்கப்படும் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரைச் சுற்றி, "சீட்' பிடிக்க பெரும் கூட்டம் முயற்சித்து வருகிறது.

No comments:

print