Friday, March 4, 2011

தொகுதிகளில் கூடுதல் வேட்பாளர்களைசுயேச்சைகளாக நிறுத்த அ.தி.மு.க., திட்டம்

ஆண்டிபட்டி:சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகப்படியான சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி கொடுக்க அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தொகுதி வாரியாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் குறித்த புள்ளி விபரங்களை சேகரித்து வருகின்றனர். சட்டசபை தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. மின்னணு இயந்திரம் மூலம் முறைகேடுகள் நடக்க வழி இருப்பதாக கூறி, பல்வேறு அரசியல் கட்சியினர் ஓட்டுச்சீட்டு முறை மூலம் தேர்தல் நடத்த வலியுறுத்தி வருகின்றனர்.கட்சியினர் கோரிக்கைகளை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த சூழலில் ஓட்டுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.,வினர் புது யுத்தியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் 75க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அ.தி.மு.க., சார்பில் நிறுத்தி சுயேட்சை வேட்பாளர்களாக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒன்றியம் வாரியாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் குறித்த விபரங்களை சேகரித்து மேலிடத்திற்கு அனுப்பும் பணியை துவக்கி உள்ளன. தேர்தல் பணி அதிகாரிகள் கூறியதாவது:ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னங்களை "செட்' செய்ய முடியும். அதை விட கூடுதலான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதலாக இன்னும் இரண்டு இயந்திரங்களை இணைப்பு செய்து 48 வேட்பாளர்கள் வரையில் "செட்' செய்து விடலாம். இதை விடவும் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடும்போது தேர்தல் கமிஷன் தனி "சாப்ட்வேர்' உருவாக்கி மாற்று ஏற்பாடு செய்து விடும்,' என்றனர்.அ.தி.மு.க.,வினர் கூறுகையில்,"அ.தி.மு.க., சார்பில் அதிகப்படியான வேட்பாளர்கள் தொகுதியில் நிறுத்தப்படுவதால், ஓட்டுச்சாவடிகளில் ஏஜன்ட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மற்ற கட்சியினரால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க இது உதவும்,' என்றனர்.

No comments:

print