Friday, March 4, 2011
பா.ம.க.,வினர் விருப்ப மனு தாக்கல் அமாவாசையில் மனுக்கள் குவியும்
விழுப்புரம் : பா.ம.க.,வினர், தேர்தலில் போட்டியிட, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், நேற்று முதல், விருப்ப மனு கொடுத்தனர். இன்று பொதுக் குழு கூட்டம் நடக்க உள்ளதால், அதிகளவில் மனுக்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ம.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு கொடுக்கலாமென, மாநில தலைவர் மணி அறிவித்திருந்தார். இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், கட்சியினரின் விருப்ப மனுக்களைப் பெற, குழுவினர், நேற்று தயார் நிலையில் இருந்தனர்.
முதலாவதாக, முற்பகல் 11.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய பா.ம.க., தலைவர் தலைக்காணிக்குப்பம் சரவணன், செஞ்சி தொகுதியில் போட்டியிட, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு கொடுத்தார். தொடர்ந்து, சமூக முன்னேற்றச் சங்க நிர்வாகியும், சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வரான பேராசிரியர் அன்பானந்தம், விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிட மனு கொடுத்தார். கட்சித் தலைவர் மணியின் பெயரில், அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டி, உழவர் பேரியக்க மாநில தலைவர் சடகோபன் விருப்ப மனு கொடுத்தார். பின், மாநில துணைத் தலைவர் கருணாநிதி, செஞ்சி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார்.
திண்டுக்கல் தொகுதிக்கு மாவட்ட அமைப்பு செயலர் வெள்ளை கோபாலும், காஞ்சிபுரம் தொகுதிக்கு பன்னீர்செல்வமும், புவனகிரி தொகுதிக்கு சக்திவேலும், விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனுக்கள், வரும் 7ம் தேதி வரை பெறப்படுகிறது. முதல் நாளான நேற்று, சிலர் மட்டுமே விருப்ப மனு கொடுத்தனர். இன்று, அமாவாசை தினம் நல்ல நாள் என்பதாலும், மேலும் தேர்தல் தொடர்பான சிறப்பு பொதுக் குழுக் கூட்டமும் இன்று நடப்பதாலும், அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதனால், இன்றைய தினமே விருப்ப மனு தாக்கல் செய்ய அதிகளவில் கட்சியினர் ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment