Friday, March 4, 2011

தேர்தல் தேதி மாற்றி அமைக்க வேண்டும்: ஜெ., கோரிக்கை

சென்னை: சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது என, தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. கடந்த 2ம் தேதி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு துவங்கியுள்ளது. மார்ச் மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. ஏழரை லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடக்கும் நாட்களில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டமாக நடைபெறும் போது, படிக்கின்ற மாணவர்களின் செயல் திறனில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்தல் பிரசாரம், மாணவர்களின் தேர்வுக்கான ஆயத்த பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், தேர்தல் பணிகளில் ஈடுபடப்போகும் ஆசிரியர்களும் தேர்தலுக்கு முன்பே ஆயத்தப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், பள்ளித்தேர்வு நடவடிக்கைகளில் ஏற்கனவே ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். கல்லூரி தேர்வுகளும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நடக்கவுள்ளது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை உலகத்தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகையை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முக்கியத்துவம் உண்டு. புத்தாண்டுக்காக மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெருமளவில் செல்வர். இதனால், தேர்தல் நாளன்று குறைவான வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வரக்கூடும். தேர்தல் நடவடிக்கையை குலைக்கும் வகையில் கள்ள ஓட்டு போடுபவர்களுக்கும், கூலிப்படையினருக்கும் இது கதவை திறந்து வைத்தது போலாகும். எனவே, தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும். ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதலிலோ தேர்தலை நடத்த வேண்டும், என்றார்.

No comments:

print