சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், "கலைஞர் டிவி'யின் பங்குதாரர்களான தயாளு, கனிமொழி எம்.பி., ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கீழ்தளத்தில் கட்சியிருடன் அப்போது நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தி.மு.க., அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ., இரண்டாவது முறையாக புகுந்தது, தி.மு.க., வட்டாரத்தை கலங்கடித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான ஏலத்தில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் ராஜா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ராஜாவிடம் நடத்திய விசாரணையில், "டி.பி. ரியாலிட்டி' நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வாவை கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக ஆளுங்கட்சி தி.மு.க.,வின், "கலைஞர் டிவி'யில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்த தகவல் கிடைத்தது. "கலைஞர் டிவி'யைப் பொறுத்தவரை, முதல்வரின் மனைவி தயாளுவுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், அதன் மேலாண் இயக்குனரான சரத் ரெட்டிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. "கலைஞர் டிவி'க்கு எந்த வகையில் முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன.இந்நிலையில், அந்த தொகையை கடனாக பெற்றதாகவும், 30 கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பி செலுத்தி விட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தில் வந்து சோதனையிடலாம் என்றும், "டிவி' நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இம்மாதம் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தற்போது சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
"கலைஞர் டிவி' விவகாரத்தை தாண்டி, கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ., முடிவெடுத்து, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இதே சூழலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன.இப்பிரச்னை அடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், "கலைஞர் டிவி' பங்குதாரர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அதில், நேற்று காலை "கலைஞர் டிவி' அலுவலகத்தில் விசாரணை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையில், நேற்று காலை 8.45 மணிக்கு திடீரென, டில்லி சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், சென்னை சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உதவியுடன் நுழைந்தனர்.அப்போது, "டிவி'யின் மேலாண் இயக்குனர் சரத் ரெட்டி இருந்தார். கனிமொழி, தயாளு இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 10.15 மணிக்கு கனிமொழியும், 10.30 மணிக்கு தயாளுவும், "டிவி' அலுவலகத்திற்குள் நுழைந்தனர். திட்டமிட்டபடி, காலை 11 மணிக்கு, தயாளுவிடம் விசாரணை துவங்கியது. ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், "டிவி'க்கு முதலீடு பெற்ற விதம், செலுத்தப்பட்ட வட்டித் தொகை எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.15 மணிக்கு விசாரணை முடிந்து, தயாளு புறப்பட்டார். அடுத்ததாக, கனிமொழியிடமும், தொடர்ந்து சரத் ரெட்டியிடமும் விசாரணை நடந்தது. பகல் 2.10 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விசாரணையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் இன்னும் தி.மு.க., - காங்கிரஸ் இடையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், சி.பி.ஐ.,யின் இந்த விசாரணை நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ.,யின் அடுத்த கட்ட, "மூவ்' என்ன என்பது, யாருக்கும் தெரியாத நிலையில், என்ன நடக்குமோ என அனைத்து தரப்பும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. சுனாமி போல் "2ஜி' விவ காரம் தி.மு.க.,வை தாக்குவதால், கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.
ஜப்பானை புரட்டி போட்டது:டோக்கியோ : ஜப்பானின் சமீபத்திய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரழிவில், அந்நாட்டின் வட கிழக்குப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிலநடுக்கப் பகுதியில் தான் ஜப்பான் அமைந்துள்ளது. பூமிக்கடியில் உள்ள யூரேஷியன், பசிபிக் மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோ. இதனால், நிலநடுக்கம் ஜப்பானுக்கு வழக்கமானதே. மேலும் அங்கு எரிமலைகளும் அதிகம்.டோக்கியோ உள்ளிட்ட ஏழு பகுதிகள் அடங்கிய கான்ட்டூ பிராந்தியம், ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவிலான நிலநடுக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட பகுதி.பயங்கர நிலநடுக்கம்: கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து கடலில் இரண்டடி உயரமுள்ள சுனாமி ஏற்பட்டது. இரண் டாவது நாளில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.அதே நேரம், ஜப்பானின் வடகிழக்குப் பகுதி, சீனாவின் தென்பகுதி, பாப்புவா நியூகினியா நாடு ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், டோக்கியோவில் இருந்து 400 கி.மீ., தொலைவில் வடகிழக்குப் பகுதியில் கடலில் நேற்று, இந்திய நேரப்படி முற்பகல் 11.16 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையோர நகரான செண்டாயில் இருந்து 81 மைல் தொலைவில் கடலில், 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் பின்னர் 8.9 புள்ளிகள் பதிவானது.செண்டாய், புக்குஷிமா பகுதிகள் துவங்கி தென்பகுதியில் டோக்கியோ மற்றும் வடபகுதியில், ஐவேட் மாகாணம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது.
மக்கள் அலறல்: டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதும், மக்கள் வீடுகளை விட்டு தெருக்களுக்கு வந்தனர். அவசரமாக எச்சரிக்கை சங்கும் ஒலித்தன. டோக்கியோ தெருக்களில் உள்ள 24 மணி நேர கடைகளில் சாண்ட் விச், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், குளிர்பானங்களை அவசரமாக வாங்கி கடையை காலி செய்தனர். கடைகளில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அங்கிருந்த பீங்கான் பொருட்கள் உடைந்து சிதறி குவியலாக இருந்தது. அவசர அவசரமாக அரசு அறிவிப்புகள் ஒலிபரப்பப்பட்டன. அலுவலகத்தில் இருந்து எல்லாரும் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். நெரிசலை தவிருங்கள். இரவு நேரம் வந்து விடும் என்பதால், பாதுகாப்பான இடங்களில் அல்லது அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
சுனாமி பேரழிவு: இந்நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி உருவானது. 10 மீ., (33 அடி) உயரத்துக்கு உருவான அலை, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை கடும் வேகத்தில் வந்து தாக்கியது. தொடர்ந்து செண்டாய், புக்குஷிமா பகுதிகளுக்குள் அலை சீறிப் பாய்ந்தது.கார்கள், லாரிகள், படகுகள், கப்பல்கள், கட்டடப் பகுதிகள் என அனைத்தும் பொம்மைகளைப் போல சுனாமியில் அடித்துக் கொண்டு செல்லப்பட்டன. இந்தப் பயங்கரக் காட்சியை, "டிவி'யில் பார்த்த பலரும் மிரண்டனர். செண்டாய் மற்றும் டோக்கியோவின் புறநகர்ப் பகுதி உட்பட 80 பகுதிகளில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.செண்டாய் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த பண்ணைகள் அனைத்தும் சுனாமி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. சுனாமி ஏற்பட்ட பின்னும் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரியவரும்.
அணு உலைகள் மூடல்: தொடர்ந்து நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள அணு உலைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அரசு அறிவித்தது. அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளியாகவில்லை என்று பிரதமர் நவோட்டா கான் தெரிவித்துள்ளார். எனினும், அணு உலைகள் இருக்கும் பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. டோக்கியோ விமான நிலையம் மூடப்பட்டதால் விமானப் போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஜப்பானின் அதே பகுதியை தாக்கக் கூடும் என்று நிலவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை : சுனாமியால் இந்தியாவுக்கும், ஜப்பானில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்து எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இருந்தாலும், அந்த மையம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. ஜப்பானை பூகம்பம் மற்றும் சுனாமி தாக்கியது, 2004ல் இந்தியாவின் பல பகுதிகளை சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதை நினைவுபடுத்தியுள்ளது.டோக்கியோ அருகில் உள்ள கான்டூ மற்றும் கான்சாய் பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை. இந்த பேரிடர் பாதிப்பில் இந்தியா உதவிக்கரம் நீட்ட தயார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி கூறுகையில், ""இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் என்ற அச்சமும் தேவையில்லை. அதேநேரத்தில், பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன,'' என்றார்.கடந்த 2004ம் ஆண்டில் சுனாமி தாக்கிய போது, இந்தோனேசியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment