சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஐவர் குழு ஐந்து முறையும், அறிவாலயத்தில் நான்கு முறையும் கூடி பேசியும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டவில்லை; இழுபறி நீடிக்கிறது. இளைஞர் காங்கிரசாருக்காக, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேட்டுள்ள சில தொகுதிகள் தி.மு.க., அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் நேற்று முட்டுக்கட்டை ஏற்பட்டது.
காங்கிரஸ் ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்., தலைவர் தங்கபாலு, சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த இரு நாட்களாக சத்தியமூர்த்தி பவனில் ஐந்து முறை கூடி, தொகுதி பங்கீடு அடையாளம் குறித்து ஆலோசித்தனர்.அதன் பின் பட்டியல் ஒன்றை தயாரித்து, அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் நான்கு முறை பேச்சு நடத்தினர். அப்படி பேசிய போது, மறுசீரமைப்பின் அடிப்படையில் மாறியுள்ள சில தொகுதிகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் எம்.எல்.ஏ., காயத்ரி தேவியின் தொகுதி, தற்போது தனித் தொகுதியாகியுள்ளது. அவர் செங்கல்பட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.அதேபோல், பள்ளிப்பட்டு எம்.எல்.ஏ., ராமனின் தொகுதி, தற்போது திருத்தணியாக மாறியுள்ளது. தொகுதியின் பெயர் தான் மாறியதே தவிர, மற்றபடி பள்ளிப்பட்டு தொகுதி 70 சதவீதம் அப்படியே <உள்ளது. 2006 தேர்தலில் திருத்தணி தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டு தோல்வி அடைந்ததால், அத்தொகுதியை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, பா.ம.க., பிடிவாதம் செய்வதால், திருத்தணி தொகுதியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், காட்டுமன்னார்கோவிலை காங்கிரஸ் கேட்கிறது. அத்தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.,வாக ரவிக்குமார் உள்ளார். அவர்கள் தொகுதியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. திருச்சி தொட்டியம் தொகுதி மறுசீரமைப்பில் முசிறியாக மாறி விட்டதால், அதை தற்போதைய காங்., எம்.எல்.ஏ., ராஜசேகர் கேட்டுள்ளார். ஆனால், முசிறி தொகுதி தங்களுக்கே என, தி.மு.க., அடம் பிடிக்கிறது. கும்மிடிப்பூண்டி தொகுதியை காங்கிரசும், பா.ம.க.,வும் கேட்பதால் அதிலும் இழுபறி நிலவுகிறது.ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளரும் தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான பழனிச்சாமிக்கு மொடக்குறிச்சி தொகுதியை ஒதுக்குவதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மொடக்குறிச்சிக்கு பதிலாக பவானி அல்லது அந்தியூரை எடுத்துக் கொள்ளுங்கள் என தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., அணியில் கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக 15 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. அத்தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தையில் தான் இழுபறி நீடிக்கிறது.அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில், தமிழக காங்கிரஸ் தலைமைக்கு ஒரு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இளைஞர் காங்கிரசுக்கு சில தொகுதிகளை ஒதுக்கும்படி கோரப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் கேட்கப்பட்ட தொகுதிகள், நான்கு அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளாக உள்ளன. அத்தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என, தி.மு.க., திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதற்கிடையில், சேவாதளம், மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கும் சீட் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய எம்.எல்.ஏ.,க்களில் சிலரின் செயல்பாடுகள், திருப்தி இல்லாத காரணத்தால் அவர்களுக்கு "சீட்' கொடுக்கக் கூடாது என, காங்கிரஸ் தலைவர் சோனியா உத்தரவிட்டிருப்பதால், சில புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் பேசுவோம் தங்கபாலு அறிவிப்பு : தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க., - காங்கிரஸ் இடையே நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
தி.மு.க., பிரதிநிதிகளும் - காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐவர் குழுவினரும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் நேற்று மாலை ஈடுபட்டனர். மாலை 6.40 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, ஒன்றேகால் மணி நேரம் நீடித்தது. இரு தரப்பிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், ""பேச்சுவார்த்தை தொடர்கிறது; திருப்திகரமாக இருக்கிறது. நாளை காலை மீண்டும் பேசுவோம்,'' என்றார்.
No comments:
Post a Comment