Tuesday, March 15, 2011

தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் தயார்: நீண்ட பேரத்திற்குப்பின்னர் தொகுதி பங்கீடு முடிவு

அ.தி.மு.க., 160 - தி.மு.க., 120சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள், பலப்பரீட்சையில் ஈடுபட தயாராகி விட்டன. இன்றைய நிலவரப்படி, அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும், தி.மு.க., 120 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

தமிழக சட்டசபை பொது தேர்தலுக்கான மனு தாக்கல், வரும் சனிக்கிழமை துவங்குகிறது. மனு தாக்கலுக்கு நான்கு நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தொகுதிகளை அடையாளம் காணுதல், வேட்பாளர்களை முடிவு செய்தல், பிரசார திட்டத்தை வகுத்தல் ஆகிய பணிகளில் சுறுசுறுப்படைந்துள்ளன.தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதால், நீண்ட பேரத்திற்குப் பின் அந்தக் கூட்டணிக்கு இறுதி வடிவம் கிடைத்துள்ளது. தி.மு.க., 120 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட, 12 தொகுதிகளில் குறைவாக தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ம.தி.மு.க.,வுக்கு மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை.

அந்தக் கட்சிக்கு மிக சொற்ப எண்ணிக்கையில், வெறும் எட்டு தொகுதி ஒதுக்க, அ.தி.மு.க., முன்வருவதால், கூட்டணியில் அக்கட்சி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தவிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியும் இறுதி வடிவம் பெற்று விட்டது. அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.அ.தி.மு.க., கடந்த முறை, 188 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்கு ஒரு வேளை அ.தி.மு.க., கூடுதல் தொகுதிகள் கொடுக்க முன் வந்தால், தன் பங்கில் இருந்துதான் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது, அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்.இந்த முறை இருமுனைப் போட்டி என்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கும் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

print