Sunday, March 13, 2011

தேர்தலில் ஓட்டுச்சீட்டை புகுத்த அ.தி.மு.க., ரகசிய திட்டம்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில், 60க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என, கட்சி மேலிடம் ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டசபை தேர்தலில் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடக்காது, ஓட்டுச் சீட்டு முறை வரும் என்பது அ.தி.மு.க.,வின் கணக்கு. "இது, அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்' என கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., நலம் விரும்பிகள், கட்சி மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லியுள்ளனர்.


சட்டசபை தேர்தலுக்காக 19ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும், 54 ஆயிரத்து 16 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தல்களை போல வரும் சட்டசபை தேர்தலிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமே ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது."மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது' என, கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டின.

வரும் சட்டசபை தேர்தலிலும் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடப்பதாலும், தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுகள் எண்ணப்படும் என்பதாலும், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. பழைய முறைப்படி சீட்டுகளில் ஓட்டுப்பதிவு செய்து பெட்டிகளில் போடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என, அ.தி.மு.க., உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. மின்னணு இயந்திரத்தில் உள்ள, ஒரு போர்டில் அதிகபட்சம் 16 பட்டன்கள் மட்டுமே இருக்கும். அதில், 16 வேட்பாளர்கள் சின்னம் மட்டுமே பொருத்த முடியும். ஒரு இயந்திரத்தில் அதிகபட்சம் நான்கு போர்டுகள் பொருத்த முடியும்.போர்டுக்கு, 16 பேர் வீதம் அதிகபட்சம், 64 வேட்பாளர்கள் சின்னங்கள் பொருத்தலாம். ஒரு தொகுதியில் அதிகபட்சம், 64 வேட்பாளர்கள் போட்டியிட்டால் மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடத்த முடியும். அதற்கும் கூடுதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டால், அந்த தொகுதியில் இயந்திரத்துக்கு பதிலாக ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தாமல் இருக்க, ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க., ஆதரவாளர்கள் 60 பேர், சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு 60 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், மின்னணு இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். அதற்காக கட்சியில், ஒவ்வொரு தொகுதியிலும் நம்பிக்கையான 60 பேர் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு கட்சித் தலைமையே வேட்பு மனு தாக்கலுக்கான தொகையையும் வழங்க உள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் பழைய முறைப்படி ஓட்டுச் சீட்டு தேர்தலை கொண்டு வரலாம், ஆளும் கட்சியின் முறைகேடுகளைத் தவிர்க்கலாம் என, அ.தி.மு.க., கணக்கு போடுகிறது.

யாருக்கு லாபம்? அ.தி.மு.க.,வின் இந்த ரகசிய திட்டம், அ.தி.மு.க.,வுக்கு எதிராகவே திரும்பும் என, தேர்தல் அனுபவஸ்தர்கள் சொல்கின்றனர்.
* ஒரு தொகுதியில் 70 பேர் போட்டியிட்டால், அவர்கள் பிரசாரம் செய்யாத போதிலும், சிலர் அவர்களுக்கு ஓட்டு போடுவர். ஒருவருக்கு குறைந்தது 100 ஓட்டு விழுந்தாலே, மொத்தம் 7,000 ஓட்டுகள் சுயேச்சைகளுக்கு சென்றுவிடும். பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசமே சில 100 ஓட்டுகள் தான் இருக்கும். அப்படியிருக்கும் போது 7,000 ஓட்டுகள் தேர்தல் முடிவையே மாற்றிவிடும். அந்த ஓட்டுகளும் ஆளும் கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகளாகத் தான் இருக்கும். இது அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும்.
* ஓட்டு எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள் தான் ஈடுபடுவர். அவர்கள் தி.மு.க., ஆதரவாளர்கள். அ.தி.மு.க.,வுக்கு விழுந்த ஓட்டை கூட தி.மு.க., ஓட்டு என்று அவர்கள் முடிவு செய்தால், எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
* ஆளும் கட்சிக்கு கடைசியில் சுயேச்சைகள் விலை போய்விட்டால், அப்போதும் அ.தி.மு.க.,வுக்கு சிக்கலாகி விடும்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

print