தாம்பரம் தொகுதியில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்ட வேளச்சேரி தொகுதியில், துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
தாம்பரம் தொகுதியில் இருந்து வேளச்சேரி புது தொகுதி பிரிக்கப்பட்டுள் ளது. இதில் வேளச்சேரி, விஜயநகர், தரமணி, திருவான்மியூர், அடையாறு மற்றும் சாஸ்திரிநகர் அடங்கும். மாநகராட்சி வார்டு 151 முதல் 155 வரை உள்ளது. இந்த தொகுதியில், மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 26 பேர் (புதியதாக சேர்க்கப்பட்டவர்கள் இல்லாமல்) உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் இத்தொகுதி தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ம.க., வசம் உள்ளது. இது தாம்பரம் தொகுதியாக இருந்த போது, கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. எனவே, தி.மு.க., வசம் உள்ள இத்தொகுதியில் மீண்டும் தி.மு.க., போட்டியிட வாய்ப்புள்ளது.
வேளச்சேரியில் துணை முதல்வர் ஸ்டாலின் வீடு உள்ளது. அவர் இங்கு போட்டியிட கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இந்த புதிய தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடமும் பரிசீலித்து வருகிறது.அதேநேரம், வேளச்சேரி தொகுதியை ஒதுக்கும்படி காங்கிரசும் கோரி வருகிறது. அத்தொகுதியில் போட்டியிட கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிமாறனுக்காக இத்தொகுதி ஒதுக்க வேண்டும் என, அக்கட்சி கோரவுள்ளது. தி.மு.க., வினர் விருப்பப்படி வேளச்சேரி தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டால், அது வி.ஐ.பி., தொகுதியாக மாறிவிடும்.
No comments:
Post a Comment