Saturday, March 19, 2011

குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி

"குற்றப் பின்னணியில் உள்ள வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுவில், குற்ற வழக்குகள் குறித்த முழுத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், வேட்பாளரின் குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் இலவசமாக தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஓட்டு போடும் ஒவ்வொரு வாக்காளருக்கும் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி உண்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. எனவே, போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் பின்னணி விவரங்களை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தேர்தல் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் புதிய முறையிலான வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்றும், இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தேர்தல் கமிஷன் அதிரடியாக தற்போது ஒரு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, எல்லா தேர்தல் அதிகாரிகள் மூலம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இந்த புதிய நடைமுறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளர் மீது சட்டப்படி கோர்ட்டில் உள்ள வழக்குகள் அல்லது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரம்;எந்த கோர்ட்டில், எந்த பிரிவின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; கோர்ட்டின் பெயர், வழக்கு எண், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட தேதி; தீர்ப்புகள் வழங்கப்பட்டு அதற்கு மேல் முறையீடுகள் அல்லது மறு ஆய்வு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற விவரம்; வழக்குகளில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, கோர்ட்டில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்றால், அந்த வழக்குகள் குறித்த விவரம், எந்த பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; கோர்ட்டுகளின் பெயர், வழக்கு எண், கோர்ட்டு உத்தரவுகளின் விவரம்; தண்டனை காலம் குறித்த தகவல்களை குறிக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு வேட்பாளர் குறித்த தகவல்கள்களை வாக்காளர்களுக்கு இலவசமாக தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த விளக்கத்தில், "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தங்களின் முந்தைய கால வரலாறு குறித்த வாக்குமூலத்தை தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக கட்டாயப்படுத்தி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அது குறித்த விவரங்களை தேர்தல் அதிகாரி, நகல் எடுத்து அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும். மேலும், வேட்பாளர்கள் குறித்த விவரங்களை அறிய விரும்பும் பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் நகல் எடுத்து இலவசமாக அளிக்க வேண்டும். வேட்பாளர்களின் விவரங்களை அறிய விரும்பும் பொதுமக்களுக்கு அவற்றை தேர்தல் அதிகாரி அளிக்க மறுக்கக் கூடாது. வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தேர்தல் அதிகாரிகள் பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்க வேண்டும்'என, தெரிவித்துள்ளது.

No comments:

print