Sunday, March 13, 2011

தமிழகத்தில் 15 தொகுதிகளில் போட்டி: சுப்பிரமணியசாமி பேட்டி

மதுரை : ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட உள்ளது; இது தொடர்பாக பா.ஜ., உடன் ஜனதா கட்சி புதிய தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளது; இதை கூட்டணியாக கருத முடியாது; ஜனதா கட்சி போட்டியிடுவதில் இதுவரை 7 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது; இதில் திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம், குன்னூர், மதுரை மத்திய தொகுதி, மேலூர், திருத்தணி, விழுப்பரம் ஆகியன முடிவு செய்யப்பட்டுள்ளது; மற்ற 8 தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; இவற்றில் பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் ஜனதா தளமும், ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் பா.ஜ.,வும் போட்டியிடாது; இதே போன்று தேர்தலில் நானோ, சந்திரலேகாவோ போட்டியிட போவதில்லை;ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து 3 நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்; திமுக, அதிமுக ‌கூட்டணிகள் ஊழல் கூட்டணிகள்; அவைகளை எதிர்த்து நான் பிரசாரம் செய்வேன்; ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்; கனிமொழிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது; இவ்வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள்; இதே போன்று முல்லை பெரியாறு விவகாரத்திலும் நான் வழக்கு தொடர்ந்த பின்னரே தெளிவு ஏற்பட்டுள்ளது; தமிழக மீனவர்கள் பிரச்னையில் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் போராட்டம் நடத்தி வருவதாலேயே நான் வழக்கு தொடரவில்லை; அவர்கள் எனக்கு உதவினால் மீனவர்கள் பிரச்னையிலும் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு உதவ நான் தயாராக உள்ளேன். இவ்வாறு சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

print