Friday, March 11, 2011

தே.மு.தி.க., வேட்பாளர் நேர்காணல் இன்று துவக்கம்:40 தொகுதியை நான்கு வகையாக பிரித்து சீட் ஒதுக்கீடு?

தே.மு.தி.க., சார்பில், 41 தொகுதிகளில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல், இன்று துவங்குகிறது. அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், இளைஞர்கள் மற்றும் பெண்களை, அதிகளவில் களமிறக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளப் போகும் தே.மு. தி.க.,விற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிகளில் போட்டியிட சீட் கேட்டு, அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 7,502 பேர், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது.
முதல் நாள், நேர்காணலில் பங்கேற்க வருமாறு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள 79 தொகுதிகளை சேர்ந்த விருப்ப மனு தாரர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது.நேர்காணலின் போது, விருப்ப மனுதாரர்களை திணறடிக்கும் கேள்விகளை எழுப்ப, கட்சி தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்கென 25 கேள்விகள் தயாரித்து, அதை மாநில நிர்வாகிகளுக்கு கூட தெரியாமல் விஜயகாந்த் ரகசியமாக வைத்துள்ளார்.
அதே நேரத்தில் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளில் ஒன்றை மட்டும் தனக்கு எடுத்துக் கொண்டு, மற்ற 40 தொகுதிகளை நான்காக பிரித்து கட்சியினருக்கு வழங்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.முதல் 10 தொகுதிகள் கட்சியில் உள்ள அதிகம் படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது. படித்தவர்களை அரசியல் அதிகாரத்தில் அமர்த்தினால், அவர்கள் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என விஜயகாந்த் கூறி வருகிறார்.இதனால், அரசியல் புரட்சி ஏற்படுத்தும் வகையில் தனது "ரமணா' சினிமா பாணியில் இளைஞர்களை, வேட்பாளர்களாக களமிறக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.மீதமுள்ள மூன்று பங்கில் ஒரு பங்கு(10 சீட்கள்) பெண்களுக்குவழங்கப்படவுள்ளது.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், தமிழக பெண்களின் வாழ்வில் மேம்பாடு அடையவதற்கு வழி பிறக்கும் எனக் கருதி, விஜயகாந்த் இம்முடிவை எடுத்துள்ளார்.அதே நேரத்தில் ரசிகர் மன்றமாக இருந்து கட்சி வளர்ந்துள்ளதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு கவுரவம் கிடைக்கும் வகையில், அவர்களுக்கும் ஒரு பங்கு(10 சீட்கள்) வழங்கப்படவுள்ளது.இவ்வாறு 30 தொகுதிகள் போக மீதமுள்ள 10 தொகுதிகளை, மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்கள், கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுக்கும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
"சீட்' பெற மறைமுக முயற்சி: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து முழு பலத்துடன் போட்டியிடுவதால் இம்முறை கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் பலர் உறுதியாக நம்புகின்றனர்.கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட போது, பலர் "சீட்' வேண்டாம் என நழுவினர்.ஆனால், இன்றைக்கு அவர்களில் பலர், "சீட்' பெறும் மறைமுக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வந்துள்ளவர்களால் சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள அனைத்து ஓட்டல் மற்றும் லாட்ஜ்களின் அறைகளும், நிரம்பி வழிகின்றன.-நமது சிறப்பு நிருபர்-

No comments:

print