Monday, March 14, 2011

தரமற்ற தார் சாலை அமைப்பு:பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி, 33வது வார்டு பகுதியில், தரமற்ற முறையில் தார்சாலை அமைப்பதாக கூறி பணியை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, 33வது வார்டு பகுதி வழியாக செல்லும், ஆத்தூர் - பைத்தூர் வரையிலான, 5 கி.மீ., நகராட்சி தார்சாலை அமைத்து, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நின்று பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.சாலையை பராமரிப்பு செய்ய போதிய நிதி இல்லை என, நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டது. தார்சாலை மண் சாலையாக மாறியதால், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டது. அதையடுத்து, ஆத்தூர் 33வது வார்டு மற்றும் பைத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தார்சாலையை புதிதாக அமைத்து தரவேண்டும் என, பல்வேறு போராட்டம் நடத்தினர்.அதற்கு பிறகு நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தார்சாலையை, நெடுஞ்சாலைத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 5 கி.மீ., வரையிலான தார்சாலை அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொண்டு வரப்படுகிறது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ஜல்லிகள் அமைக்கப்பட்ட நிலையில், தார் ஊற்றாமல் பணியை கிடப்பில் போட்டனர். இந்நிலையில், ஆத்தூர், அம்பேத்கர் நகர் முதல் வி.வி., காலனி வரையுள்ள ஒரு கி.மீ., சாலை மட்டுமே தார் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட பணியை, நேற்று காலை, 11.30 மணியளவில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொண்டனர். அப்போது, ஜல்லிக்கற்கள் மீது, தாருடன் மண்öண்ணெய் அதிகளவு கலந்தும், தார் அளவு குறைத்து தரமற்ற முறையில் தார்சாலை அமைப்பதாக கூறி, பொதுமக்கள் திடீரென பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். அதையறிந்த, 33வது வார்டு கவுன்சிலர் அன்புநிதி, மனைவி மகா ஆகியோர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் தகராறு செய்தனர். ஆனால், பொதுமக்கள், தரமற்ற முறையில் தார்சாலை அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், தார்சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது. ஒப்பந்ததாரர் ஒப்புதல்:ஆத்தூர் - பைத்தூர் வரையிலான, 5 கி.மீ., சாலை அமைக்கும் பணிக்கு, தொகுதி எம்.எல்.ஏ., 15 சதவீதம், அமைச்சர், 5 சதவீதம் மற்றும் அலுவலர்களுக்கென, 10 சதவீதம் என மொத்தம், 30 சதவீதம் தொகையை கமிஷனாக வாங்கிக் கொண்டுதான் வேலையை ஒதுக்கி தருவதாக ஒப்பந்ததாரர் தெரிவித்ததாக, பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

No comments:

print