Saturday, April 2, 2011

தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் மாற்றம்-1 மணி நேரம் குறைப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்பட்டடு வந்தது.

இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் வாக்குப் பதிவு நேரம் 10 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பயமில்லாமல் வாக்களிக்கலாம்-டிஜிபி போலாநாத்:

இந் நிலையில் தமிழகத்தில் வாக்காளர்கள் பயமில்லாமல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டுள்ளன என்று தமிழக டிஜிபி போலாநாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளும் பதற்றமான வாக்குசாவடிகள் என்று நான் கூறியதாக பத்திரிகைகள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சமமான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறியிருந்தேன். அதை ஊடகங்கள் வேறு விதமாக செய்திகள் வெளியிட்டுவிட்டன.

எனவே, தமிழ்நாட்டில் எந்த வாக்குசாவடியும் பதற்றமானவை அல்ல என்றும், அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சமமான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய காலங்களில்தான் வாக்குசாவடிகளை பதற்றமானவை, பதற்றமில்லாதவை என்று பிரித்தார்கள். இப்போது தேர்தல் கமிஷன் அனைத்து வாக்குசாவடிகளையும் ஒரே மாதிரியாக கருதி பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 54,016 வாக்குசாவடிகளுக்கும், அவை அமைக்கப்படும், 28,909 மையங்களிலும் ஒரே விதமான பாதுகாப்பு இருக்கும்.

ஒரு வாக்குசாவடிக்கு ஒரு போலீஸ்காரரும், ஒரு போலீஸ்காரர் அல்லாத காவலாளியும் தேவைக்கு ஏற்ப பணியில் இருப்பார்கள். நான்கைந்து வாக்குசாவடிகள் கொண்ட மையங்களுக்கு ஒரு ரோந்து வண்டியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் துணை ராணுவ வீரர்கள் ரோந்து செல்வார்கள். மொத்தம் 4,852 ரோந்து வாகனங்கள் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும்.

மக்கள் பயமில்லாமல், சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு 15 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை அனுப்ப தேர்தல் கமிஷன் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வீரர்கள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கூடுதலாக கேட்ட துணை ராணுவ படை அனுப்பப்படுமா என்பது பற்றி தேர்தல் கமிஷன் இன்னும் உறுதி செய்யவில்லை என்றார் அவர்.

No comments:

print