Saturday, April 23, 2011

ரிஷிவந்தியம் தொகுதியில் மக்கள் யார் பக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில், 11 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., ஐந்து இடங்களிலும், பா.ம.க., மூன்றிலும், வி.சி., இரண்டிலும், காங்., ஒன்றிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க., கூட்டணியில், அ.தி.மு.க., ஏழு தொகுதிகளிலும், தே.மு.தி.க., மூன்றிலும், கம்யூ., ஒன்றிலும் போட்டியிட்டன.
ஓட்டுப்பதிவு சதவீத அடிப்படையில், தொகுதியின் தற்போதைய நிலை குறித்த அலசல் தொடர்ச்சி:
விழுப்புரம்: இத்தொகுதியில், 2 லட்சத்து, 9 ஆயிரத்து, 250 வாக்காளர்களில், 87 ஆயிரத்து, 530 ஆண்கள், 86 ஆயிரத்து, 254 பெண்கள், மூன்று திருநங்கைகள் உட்பட, 1 லட்சத்து, 73 ஆயிரத்து, 794 பேர் ஓட்டளித்துள்ளனர். தி.மு.க., அமைச்சர் பொன்முடி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் நேரடியாக மோதினர்.அரசின் சாதனைகள், இலவசங்கள், தேர்தல் நேர கவனிப்பு, இவை தான், 82 சதவீதம் ஓட்டு பதிவாக காரணம் என, அமைச்சர் தரப்பினர் கூறுகின்றனர். அரசு ஊழியர்கள், பா.ம.க., வி.சி., கூட்டணி பலம், அ.தி.மு.க.,வில் கோஷ்டி பிரச்னை இவை தங்களுக்கு சாதகம் என்றும் தி.மு.க.,வினர் கணிக்கின்றனர்.தி.மு.க., ஆட்சியின் ஊழல், கட்சியினர் மற்றும் மக்களிடம் அமைச்சர் பொன்முடியின் அணுகு முறை, தே.மு.தி.க., கூட்டணி பலம், பா.ம.க., - வி.சி., உள்ளடி வேலைகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.தொகுதிக்கு பல நன்மைகள் செய்திருந்தாலும், அமைச்சரின் அணுகுமுறையால் பல்வேறு இடங்களில் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். இதிலிருந்து அமைச்சர் மீண்டு(ம்) வருவாரா என்பது சந்தேகமே.
விக்கிரவாண்டி: இத்தொகுதியில், 1 லட்சத்து, 86 ஆயிரத்து, 627 வாக்காளர்களில், 77 ஆயிரத்து, 238 ஆண்கள், 74 ஆயிரத்து, 514 பெண்கள், திருநங்கை ஒருவர் உட்பட, 1 லட்சத்து, 51 ஆயிரத்து, 864 ஓட்டுகள் பதிவாகின. தி.மு.க.,வில் ராதாமணி, அ.தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ., வக்கீல் ராமமூர்த்தி நேரடியாக மோதினர். தி.மு.க., வெற்றி உறுதியாக இருந்த நிலையில், "கவனிப்பு' முறையாக சென்று சேராததால், அதிருப்தியில் ஓட்டுகள் சிதறியுள்ளன.அதே போல், விக்கிரவாண்டி பேரூராட்சி, தி.மு.க., தலைவர் கொலையால், இரு மையங்களில் குறைந்த அளவே ஓட்டுகள் பதிவானது. இது, தி.மு.க.,வுக்கு பின்னடைவாகியுள்ளது.
வானூர்: இத்தொகுதியில், 1 லட்சத்து, 96 ஆயிரத்து, 054 வாக்காளர்களில், 81 ஆயிரத்து, 230 ஆண்கள், 77 ஆயிரத்து, 236 பெண்கள் உட்பட, 1 லட்சத்து, 58 ஆயிரத்து, 699 பேர் ஓட்டளித்தனர். தி.மு.க.,வில் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், அ.தி.மு.க., ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜானகிராமன் போட்டியிட்டனர். கூட்டணி பலம், முழு கவனிப்பும் தங்களுக்கு வெற்றியைத் தருமென தி.மு.க., பலமாக நம்பியுள்ளது.புஷ்பராஜின் வளர்ச்சியை விரும்பாதவர்கள், பா.ம.க., அதிருப்தியாளர்கள், தொகுதியை பறி கொடுத்த வி.சி.,யின் அதிருப்தி இவையெல்லாம், அ.தி.மு.க.,விற்கு சாதகமாக உள்ளது. தே.மு.தி.க.,வினர் அதிகம் உள்ள தொகுதி என்பதால், வெற்றி கிடைக்குமென, அ.தி.மு.க., நம்பியுள்ளது.
சங்கராபுரம்: இத்தொகுதியில், 2 லட்சத்து, 8 ஆயிரத்து, 710 வாக்காளர்களில், 83 ஆயிரத்து, 496 ஆண்கள், 87 ஆயிரத்து, 3 பெண்கள் உட்பட, 1 லட்சத்து, 70 ஆயிரத்து, 499 பேர் ஓட்டளித்துள்ளனர். தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன், அ.தி.மு.க., மோகன் இருவருமே இறுதி வரை சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றினர்.கடைசி நேர கவனிப்புகளால், இவரும் சம பலத்தில் உள்ளனர். இங்கு பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால் இருவருமே தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறுகின்றனர். மாற்றத்தை மக்கள் விரும்பினரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
திருக்கோவிலூர்: இத்தொகுதியில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. தி.மு.க., சார்பில் தங்கம், தே.மு.தி.க., சார்பில் வெங்கடேசன் போட்டியிட்டனர். தொகுதியில் அதிகம் வசிக்கும் உடையார் சமூகத்தையும், பணபலத்தையும் நம்பி, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பின்றி, தங்கம் தேர்தலை சந்தித்தார்.தொண்டர் பலம், கூட்டணி கட்சிகள் ஆதரவு வெங்கடேசனுக்கு கை கொடுத்துள்ளது. விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரின் பிரசாரம் வெங்கடேசனுக்கு பிளஸ் பாயின்ட்.ரிஷிவந்தியம்: இங்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், காங்., சிவராஜ் களத்தில் உள்ளனர். வி.ஐ.பி., அந்தஸ்தை பெற்றுள்ள
இத்தொகுதியில், 2 லட்சத்து, 6 ஆயிரத்து, 729 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 79 ஆயிரத்து, 296 ஆண்கள், 91 ஆயிரத்து, 771 பெண்கள் உட்பட, 1 லட்சத்து, 71 ஆயிரத்து, 67 பேர் ஓட்டளித்தனர்.தே.மு.தி.க.,விற்கு சாதகமாக உள்ள, 23 ஆயிரம் ஓட்டுகள், அ.தி.மு.க., கூட்டணி ஓட்டுகள், ஆளுங்கட்சி மீது அதிருப்தி, கடைசி நேர பிரசாரம் தங்களுக்கு உதவும் என, தே.மு.தி.க., நம்புகிறது. கூட்டணி பலம், தேர்தல் பிரசார வியூகம், இறுதி கட்ட கவனிப்புகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது போன்றவை தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, காங்கிரஸ் தரப்பு நம்புகிறது.மாற்றத்தை விரும்பும் நடுநிலை வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள், அதிகளவு பதிவான பெண்கள் ஓட்டுகள், தே.மு.தி.க.,விற்கு சாதகமாக இருக்கும்.

No comments:

print