Thursday, April 14, 2011

தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும் 68

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 77.4 சதவீத வாக்குகள் நேற்றைய தேர்தலில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மிக அதிகபட்சமாக கரூரில் 86 சதவீதமும், குறைந்தபட்தமாக கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் 68.7 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கத்தில் 80 சதவீதமும், தேமுதிக தலைவர் விஜய்காந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியத்தில் 78 சதவீதமும், முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரில் 75 சதவீதமும், துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 60 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் அமைதியாகவும்,கள்ள ஓட்டுக்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இல்லாமலும் நடந்து முடிந்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

நேற்று தமிழக சட்டசபைக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரைஇல்லாத அளவு வாக்காளர்கள் காலையிலிருந்தே விறுவிறுப்புடன் வாக்குகளைப் பதிவு செய்தனர். வழக்கத்தை விட அதிக அளவில் வாக்காளர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் வழக்கமாக நகர்ப்புறங்களில் மந்தமாக காணப்படும் வாக்குப் பதிவு நேற்று தலைகீழாக மாறியிருந்தது. நகரங்களிலும் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

அசம்பாவிதம் இல்லாத வாக்குப் பதிவு

சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு குறித்து பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சட்டசபை தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுயேச்சைகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. மாலை 5 மணிக்குப் பிறகும் சில வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. அதில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கியூவில் நின்று வாக்களித்தனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் 70.22 சதவீதமும், நாடாளுமன்றத் தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் அதைவிட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த தேர்தலில் ஏராளமான இளைஞர்கள், நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்துள்ளனர். இதற்கு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடியது மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காரணம். இதனால், வாக்காளர்களிடம் ஓட்டுப்போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

வாக்குப்பதிவில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஒன்றும் இல்லை. 65 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. அவற்றில் 11 எந்திரங்கள் உடனடி சரிசெய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. எஞ்சிய 54 எந்திரங்கள் மாற்றப்பட்டன.

மொத்தம் 4 இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. அதில் 2 இடங்களில் சரிசெய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வல்லையாவட்டம், பருத்திக்குடி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் இடமாறிவிட்டது. அந்த வாக்காளர்களுக்கு பஸ் வசதி செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்த பிறகும் அவர்கள் அங்குபோய் வாக்களிக்க மறுத்து தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. பின்னர் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது.

ரூ. 45 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்:

இந்த தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரொக்கப்பணம் மற்றும் பரிசுபொருட்களின் மதிப்பு ரூ.45 கோடி ஆகும். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.5 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள பணத்தில் உரிய ஆவணங்கள்

சமர்ப்பிக்கப்படாவிட்டால் அந்த தொகை தேசிய கருவூலத்திற்கு அனுப்பப்படும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தொடர்பாக 1,565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 53 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்துகொண்டது என்று புகார் சொல்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் விதிமுறைதான். தமிழகத்திற்கென்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றார் அவர்.

வாக்காளர்களிடையே விழிப்புணர்வு:

வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு, வாக்களிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு கிடைத்த பலனாக இது கருதப்படுகிறது.

நேற்றைய வாக்குப்பதிவின்போது காலையில் நல்ல கூட்டம் காணப்பட்டது. பலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்றிருந்து வாக்களித்தனர். ஆனால் மதியத்தில் கூட்டம் குறைந்தது. இதனால் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால் மாலை4 மணியளவில் மீண்டும் கூட்டம் அதிகரித்தது. இதனால் 5 மணி முடிந்தபோதும் நூற்றுக்கணக்கானோர் பல பூத்களில் நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தல் பிரசாரம் மந்தமாக இருந்தபோதிலும் வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் பெரும் ஆரவாரத்தோடு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் மனதில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.

யாருக்கு வாக்களித்தார்களோ, என்னவோ, வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்கள் மனதில் அதிகரித்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம்தான்.

படித்தவர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படும் கேரளாவை விட தமிழகத்தில் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதும் இன்னொரு முக்கிய விஷயம். அதேபோல புதுச்சேரியிலும் மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதும் கவனிப்புக்குரியது.

No comments:

print